Published : 21 May 2021 03:14 AM
Last Updated : 21 May 2021 03:14 AM

கரோனா பீதியும், அச்சத்தையும் போக்கும் வகையில் ‘ப்ராஜக்ட் இமை’, ‘உதவி’ திட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை: 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

இந்திய மருத்துவ சங்கம் உருவாக்கியுள்ள ‘ப்ராஜக்ட் இமை’ திட்டம் குறித்த விழிப்புணர்வு போஸ்டர். அடுத்த படம்: சிஎம்சி மருத்துவமனை உருவாக்கியுள்ள ‘உதவி’ என்ற மையத்தின் போஸ்டர்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா அச்சம் குறித்தும் கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் இந்திய மருத்துவ சங்கமும், சிஎம்சி மருத்துவமனையும் இணைந்து தொடங்கியுள்ள இலவச ஆலோசனை திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பார்க்காத அளவில் இருப்பதால் மக்கள் மத்தியில் பீதி கலந்த அச்சம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கரோனா இரண்டாம் அலை தொற்றில் ஆக்சிஜன் அளவு குறைபாடு காரணமாக மூச்சுத் திணறலுடன் அதிகம் பேர் பாதிப்பதுடன் சிகிச்சை பெறாமல் வீடுகளில் உயிரிழப்பு சம்பவமும் அதிகரித்து வருகிறது.

கரோனா குறித்த அச்சமும், பீதியில் இருக்கும் மக்களுக்கு ஆலோசனையும் சரியான சிகிச்சைக்கான வழிகாட்டுதல், ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை அளிக்க இந்திய மருத்துவ சங்கம், சிஎம்சி மருத்துவமனை மற்றும் விஐடி முன்னாள் மாணவர்கள் இணைந்துள்ளனர். இதற்காக, ‘ப்ராஜக்ட் இமை’ என்ற பெயரில் இந்திய மருத்துவ சங்கமும், சிஎம்சி மருத்துவமனை சார்பில் ‘உதவி’ என்ற இலவச ஆலோசனை மையத்தை தொடங்கியுள்ளனர்.

இதில், ‘ப்ராஜக்ட் இமை’ என்ற ஆலோசனை மையத்தை 89399-11411 என்ற எண்ணிலும், சிஎம்சியின் ‘உதவி’ மையத்தை 44 4631 3199 என்ற எண்ணிலும் இலவசமாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை பயன்படுத் துவதில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில், ‘ப்ராஜக்ட் இமை’ திட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 150 பேரும் சிஎம்சி மருத்துவமனையின் ‘உதவி’ மையத்தை தினசரி 150-க்கும் அதிகமானோரும் பயன்படுத்தி வருகின் றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மக்களுக்காக தொடங்கி யுள்ள ‘ப்ராஜக்ட் இமை’ திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் வேலூர் கிளை தலைவர் டாக்டர் மதன் மோகன் கூறும்போது, ‘‘150 மருத்துவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து ‘திரைவ் டிஜிட்டல் (Thrive Digital)’ என்ற அமெரிக்க மென்பொருள் உதவியுடன் இந்த சேவையை தொடங்கியுள்ளோம். இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய விஐடி முன்னாள் மாணவர்கள் முன்வந்துள்ளனர்.

24 மணி நேரமும் செயல்படும் இந்த ஆலோசனைக்காக 3 மணி நேரத்துக்கு ஒரு மருத்துவர் என பணியில் இருப்பார்கள். ஒவ்வொரு மருத்துவருக்கும், தன்னார்வலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்தபடியே இந்த மென்பொருள் வழியாக ஆலோசனைகளை வழங்குவார்கள்.

கரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையுடன் சிஎம்சி மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள மருந்துகளை பரிந்துரை செய்கிறோம். தேவை ஏற்பட்டால் மருந்தகங்கள் மூலம் அவர்களுக்கு மருந்து சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்கிறோம். ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு அதை மேம்படுத்தும் வீடியோவையும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி வைக்கிறோம். தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உணவு தேவை இருந்தால் அவர்களுக்கு ஜிஆர்டி நிறுவனம் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த ஆலோசனை வசதியை நாங்களும் சிஎம்சி மருத்துவமனையும் பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரே நேரத்தில் தொடங்கி உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x