Published : 21 May 2021 03:14 AM
Last Updated : 21 May 2021 03:14 AM
வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி உயிரிழந்து 7 மணி நேரமாகியும் அவரது உடலை அகற்றாததைக் கண்டித்து, அங்கு சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பென்ட்லேண்ட் அரசு மருத்துவ மனைகளில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந் துள்ளார்.
ஆனால், நேற்று காலை 8 மணியளவில் கூட உயிரிழந்தவரின் உடலை அந்த சிகிச்சை அறையில் இருந்து அகற்றாமல் இருந்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலை அகற்ற மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை. பல முறை தெரிவித்தும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதால் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவியது.
அதேநேரம், நேற்று காலை 8.30 மணியளவில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்காக காலை உணவு விநியோகம் செய்ய ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போதும் உயிரி ழந்தவரின் உடலை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 15-க்கும் மேற்பட்ட கரோனாநோயாளிகள் காலை உணவை வாங்க மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த மருத்துவர்கள், செவிலியர்கள் விரைந்து சென்று நோயாளிகளை சமாதானம் செய்தனர்.
மேலும், மருத்துவமனை ஊழியர்களை வரவழைத்து உயிரிழந்தவரின் உடலை அகற்றியதுடன் அந்த வார்டையும் சுத்தம் செய்தனர். அதன் பிறகே போராட்டத்தை கைவிட்ட கரோனா நோயாளிகள் காலை உணவை வாங்கி சாப்பிட்டனர். சுமார் 7 மணி நேரத்துக்கும் அதிகமாக உயிரிழந்தவரின் உடலை கரோனா சிகிச்சை வார்டில் இருந்து அகற்றாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கரோனா நோயாளிகள் திடீர் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT