Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM
பொதுமக்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்க, இன்றுமுதல் இ-பதிவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. கரோனா அச்சம் காரணமாக வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், தெற்கு ரயில்வேயில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகள் வருகை ஓரளவுக்கு இருக்கும் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் வருகையைப் பொறுத்து குறைந்த அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு இ-பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழக அரசின் புதிய உத்தரவுப்படி, அத்தியாவசிய தேவையான திருமணம், முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோருக்கான உதவி போன்றவற்றுக்கு மாவட்டத்துக்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இன்று (17-ம் தேதி) முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும் என அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க இன்று முதல் இ.பதிவு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT