Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் தேவையைகருத்தில் கொண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைவளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க தமிழக அரசும் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்தனர். பின்னர், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 6-ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கின. ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான நுழைவுவாயில் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலையின் இடது பக்கவாட்டில் உள்ள மற்றொரு கேட் வழியாக ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக மோட்டார்கள், இயந்திரங்களை இயக்கி பரிசோதித்து பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டு 3 ஆண்டுகள் ஆவதால், ஒவ்வொரு பகுதியாக தொழில்நுட்பப் பணியாளர்கள் இயக்கி பரிசோதித்து வருகின்றனர். இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முழுமையாக முடிவடைந்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்தும் தயாராகிவிடும். ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் கண்காணிப்பு குழு மீண்டும் ஆய்வு நடத்தி, ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கும். அதன் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி முழு அளவில் தொடங்கும். ஏற்கெனவே திட்டமிட்டபடி,7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு அளிக்க 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன்கள் உள்ளன. இதில், நேற்று 7,325 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT