Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் விநியோக வசதி: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

கோப்புப்படம்

வேலூர்

வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனை களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண் ணிக்கை 600-ஆக அதிகரிக்க 24 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய ஆக்சிஜன் விநியோக மையங்களை ஏற்படுத்தவுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக வீரியமாக இருப்பதால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத் தில் கரோனா தொற்றால் நேற்று 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 ஆயிரத்து 109 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 415 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது, வேலூர் மாவட்டத்தில் தொற்று சதவீதம் 8.5 சதவீதமாக உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 5 லட்சத்து 39 ஆயிரத்து 439 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 502 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 35,675 பேர் இரண்டாம் டோஸ் என மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 177 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 15.9 சதவீதமாகும். இது மாநில அளவில் மூன்றாவது இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் 560-ல் இருந்து 938-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவமனையில் 901 படுக்கைகளின் எண்ணிக்கை 938-ஆகவும், நாராயணி மருத்துவமனையில் 152 படுக்கைகள், நறுவீ மருத்துவமனையில் 144-ஆக இருந்த படுக்கைகள் 200-ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திரா நர்ஸிங் ஹோம் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இங்கு, 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர மணி சுந்தரம், குமரன் மருத்துவமனை, லட்சுமி மருத்துவமனை, சந்தியா மருத்துவ மனை, ஜோதி மருத்துவமனை என 6 தனியார் மருத்துவமனைகளை கரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக மாற்ற அரசிடம் அங்கீகாரம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 85 படுக்கை வசதிகள் கிடைக்கும். இதில், 66 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும் 10 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டதாகும்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியாத்தம், பேராணாம்பட்டு, அணைக்கட்டு அரசு மருத்துவமனைகள், பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றில் 1,130 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 1,403 படுக்கைகள் என மொத்தம் 2,533 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 145 படுக்கைகள் ஐசியு வசதியும், 420 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும் உள்ளன. இங்கு, கூடுதலாக 400 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். இங்கு, ஏற்கெனவே 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோகம் மையம் உள்ள நிலையில் கூடுதலாக 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக மையத்தை ஏற்படுத்த வுள்ளனர்.

அதேபோல், வேலூர் அரசு பென்ட் லேண்ட் மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத் தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் விநியோக மையம் உள்ளது. இங்கு, கூடுதலாக 16 ஆயிரம் லிட்டர் கொண்ட புதிய ஆக்சிஜன் விநியோக மையம் அமைக் கப்பட உள்ளது. அதேபோல், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் உள்ள 125 படுக்கைகள் அதையொட்டி உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்ய 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக மையம் அமைக்கப்படவுள்ளது.

மேலும், குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் தற்போது 75 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு, கூடுதலாக 75 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் விநியோக மையம் ஏற்படுத்தப்படும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x