Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

மலைகளை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு; 2 இளைஞர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அபராதம்: வனத்துறையினர் நடவடிக்கை

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை உள்ளிட்ட 3 மலைகளை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 இளைஞர்களை கைது செய்த வனத் துறையினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை உட்பட 3 மலைகளை டிரோன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 2 பேருக்கு வனத்துறையினர் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவண்ணாமலையில் அக்னி மலையாக உள்ளது அண்ணாமலை. 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மகா தீபம் ஏற்றப்படும். மேலும், பவுர்ணமி உட்பட அனைத்து நாட்களிலும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையை பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். மான், முயல், குரங்கு மற்றும் மயில் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்கின்றன.

இதேபோல், திருவண்ணா மலை அருகே கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலை உள்ளது. மூலிகை மரங்கள் வளர்ந்துள்ளன. பல ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வாழ்கின்றன. கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைகள் அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. மலை பகுதிக்கு செல்லும் நபர்கள், தீ வைத்துவிட்டு செல்வதாக மலைகளை சுற்றியுள்ள கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை, கவுத்தி மலை மற்றும் வேடியப்பன் மலைகளை ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதையறிந்த வனத்துறை உயர் அதிகாரிகள், தடை செய்யப்பட்டுள்ள மலைகளை படம் பிடித்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதையடுத்து, திருவண்ணா மலை வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை பே கோபுரத் தெருவில் வசிக்கும் சரவணன் மற்றும் அருணாசலம் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களுக்கு தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்த ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x