Published : 29 Apr 2021 03:14 AM
Last Updated : 29 Apr 2021 03:14 AM
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ரகசியமாக சந்தித்ததாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் நேற்று புகார் மனு அளித்தார்.
பின்னர் இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப.கமலக்கண்ணனை, அவரது அலுவலகத்தில் ஏப்.26-ம் தேதி தனியாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியுள்ளார். அங்கு தான் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அலுவலக ஊழியர்கள் யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளேன். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்திட்டு பெற்று வருவதுதான் வழக்கம்.
ஆனால், அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் வீட்டுக்கேச் சென்று அறிவிப்புகள் தரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT