Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் கிரிவலம்: புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் சென்றதாக வெளியான படத்தால் சர்ச்சை ஏற்பட்டது.

திருவண்ணாமலை

கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய ஏப்.26 முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இதனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி தரிசனம் மற்றும் சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சித்ரா பவுர்ணமிக்கு அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் கிரிவலம் செல்வதாக தகவல் வெளியானது. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அந்த தகவலை உறுதி செய்யும் வகையில்திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகனும், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான எ.வ.கம்பன் மற்றும் அவருடன் 2 பெண்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கிரிவலம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த படத்தில் உள்ள 2 பெண்களில், முகக் கவசம் அணிந்து காணப்படுபவர்ஸ்டாலினின் மகள் செந்தாமரை என்று கூறப்படுகிறது. அவருடன் சென்ற மற்றொரு பெண் மற்றும் கம்பன் ஆகியோர் முகக்கவசம் அணியவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வெற்றி பெறுவதற்காக, பிரசித்திப் பெற்ற கோயில்களில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்து வரும் நிலையில், வேண்டிய வரம் கிடைக்கும் நாள் என்று இந்து மத பக்தர்களால் நம்பப்படும் சித்ரா பவுர்ணமியில் செந்தாமரை கிரிவலம் சென்றுள்ளார் என்றும், முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் சித்ர குப்தனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.

பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விவிஐபிக்கள் கிரிவலம் சென்றது பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, மேலிடத்தின் உத்தரவுபடி கிரிவலம் செல்ல அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x