Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM
திருப்பத்தூர் மாவட்டம் ஜமுனா மரத்தூர் வனப்பகுதியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஜலகம்பாறை அருவியில் நேற்று நீர்வரத்து ஏற்பட்டது. திடீர் மழையில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தினசரி சராசரியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் சராசரியை விட 5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என கூறப்பட்டது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ ஆரம்பித்து, மாலை 4 மணிக்குப் பிறகு வேலூர் மற்றும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
பள்ளிகொண்டா பகுதியில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில், சின்ன கோவிந்தம்பாடியைச் சேர்ந்த பிச்சாண்டி (39 ) என்பவர் திப்பசமுத்திரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு கூலி வேலைக்கு நேற்று முன்தினம் சென்றார். மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் அப் பகுதியில் உள்ள மின் கம்பி அறுந்து தேங்கி கிடந்த மழை நீரில் விழுந்தது.
அவ்வழியாக கூலி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பிச்சாண்டி தண்ணீரில் விழுந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பிச்சாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த தன கொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரோஜாம்மாள் என்பவர் தனது விவசாய நிலத்தில் பசுமாட்டை நிலத்தில் கட்டி வைத்திருந்தார். மின்னல் தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது. காட்பாடி வட்டம் வள்ளிமலை கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு சொந்த மான ஆடுகள் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.
திடீரென மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் 9 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
மழையளவு
திடீர் கோடை மழையால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை நிலவரப் படி வேலூர் மாவட்டத்தில் பொன் னையில் அதிகபட்சமாக 11 மி.மீ மழை பதிவாகி இருந்தது. வேலூரில் 8.5, அம்முண்டி சர்க்கரை ஆலை பகுதியில் 9 மி.மீ மழை பதிவாகி இருந்தது. அதேபோல், திருப்பத்தூர் மாவட் டத்தில் வாணியம்பாடியில் 2.3, திருப்பத்தூரில் 2.1, நாட்றாம் பள்ளியில் 2.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
ஜலகம்பாறையில் நீர்வரத்து
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமுனாமரத்தூர் வனப் பகுதியில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஜலகம்பாறை அருவியில் நேற்று நீர்வரத்து காணப்பட்டது.
ஓரிரு நாட்களுக்கு மழை பெய்தால் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அருவியில் நீர்வரத்து இருக்கும் என கூறப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT