Published : 18 Apr 2021 03:19 AM
Last Updated : 18 Apr 2021 03:19 AM
பொதுவெளி நடமாட்டம் அதிகமாகி உள்ள நிலையில் இன்றைக்கு முதன்மை பிரச்னையாக உணவு இருந்து வருகிறது. அதிக விலை, குறைவான தரம், சேவை குறைபாடு, சுவைக்கான கலப்புகளில் மாறுபாடு என்று ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டிய நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க... வெளியிடங்களில் பணமில்லாத பரிதவிப்புகளில் சிக்கி உணவுக்காக ஏங்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி எதிரே ரூ.10 சாப்பாட்டுக் கடை செயல்பட்டு வருகிறது. 4 இட்லி, பொங்கல், தோசை, ஊத்தப்பம், தக்காளிசாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், 2 சப்பாத்தி என்று அனைத்துமே தலா ரூ.10க்கே விற்கப்படுகிறது.
மனிதநேய ஆதரவற்றோர் காப்ப கத்தில் படித்த மாணவ, மாணவியர் இதனை முன்னெடுத்து செய்து வருகின்றனர். காலை 7 மணிக்கு துவங்கும் இந்த ‘இரைசேவை’ இரவு 9 மணி வரை நீடிக்கிறது. காப்பக ஊழியர்களே அனைத்துப் பணியையும் மேற்கொள்கின்றனர். சமையலறை, உணவுக்கூடம், பார்சல் பகுதி என்று உணவகத்துக்கே உரிய அனைத்து பகுதிகளும் இங்கு இருக்கிறது.
ஆனால் கல்லாப்பெட்டி மட்டும் இங்கு இல்லை. சிறிய மேஜையில் உண்டியல் ஒன்று வைத்திருக்கின்றனர். வாடிக்கையளர்கள் பணத்தை இதில் போட்டுவிட்டே செல்கின்றனர். இவர்களை யாரும் கண்காணிப்பதும் இல்லை. பணம் இல்லை, குறைவான தொகை உள்ளது என்பதற்காக உணவை கடந்து செல்பவர்களின் வயிறை குளிரச் செய்யவே இந்த ஏற்பாடாம்.
தினமும் 300 முதல் 400 பேர் இங்கு வந்து செல்கின்றனர். எதிரே மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளதால் ஏழைகள், நோயாளிகள் பலருக்கும் இது ‘வயிற்றுப் பிரசாதமாக’ அமைந்து இருக்கிறது. மேலும் குறை வருமானம் உள்ளவர்கள். வெளியூர்களில் இருந்து இப்பகுதிக்கு வந்து முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் இது வீட்டுச் சமையலறையாக செயல்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் விலைவாசியினால் பெரிய உணவகங்களே மூன்று இலக்க கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது. இதுகுறித்து காப்பக நிறுவனர் பால்பாண்டியன் கூறுகையில், ஆதரவற்றோர், கைவிடப் பட்டோர் என பலரையும் பராமரித்து வருகிறோம். தேனி மாவட்ட மக்களின் உதவியினால்தான் முழுச்செயல்பாடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கு படித்து வேலைக்குச் சென்ற பல மாணவ, மாணவியர் கரோனா நேரத்தில் உணவு சேவையில் ஆர்வம் காட்டினர். ஓட்டல் இல்லாத நேரத்தில் தெருவோரம் உள்ளவர்கள், மருத்துவமனை நோயாளிகள், போக்குவரத்து முடங்கியதால் வழியில் சிக்கிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
அப்போதுதான் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைவான தொகையில் தரமான உணவு வழங்குபவர்களின் செயல் எங்களை ஈர்த்தது. எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இச்சேவையைத் தொடர எங்கள் மாணவர்கள் முடிவு செய்தனர். இதனைப் புரிந்து கொண்ட தன்னார்வலர் ஒருவர் இடம் ஒதுக்கிக் கொடுத்தார். முக்கிய பிரமுகர்கள், தேனி மாவட்ட மக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை தந்து உதவுகின்றனர். குடும்ப விசேஷ தினங்களில் பலரும் செய்யும் நிதியுதவி பயனுள்ளதாக இருக்கிறது.
தவிர வாடிக்கையாளர் சிலர் பிரியப்பட்டு கூடுதல் பணத்தையும் போட்டுச் செல்கின்றனர். இதுபோன்று ஏராளமானோர் இச்சேவையின் ‘பங்குதாரர்களாக’ உள்ளனர். அதனால் நிர்ணயமில்லாத கட்டண உணவை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். கிட்னி பாதித்தவரின் குடும்பத்துக்கு பல வாரங்களாக உணவளித்தது, மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்கு வந்த நாடோடி குடும்பத்தை உணவகத்திலேயே தங்க வைத்து பராமரித்தது என்று மனதுக்கு நிறைவான நிகழ்வுகள் அதிகம் உள்ளன என்றார்.
இவருக்கு உதவியாக முகிலன், நாகராஜ், கார்த்திக், காட்டுராஜா, மாரியம்மாள், பழனீஸ்வரி உள்ளிட்ட குழுவினர் செயல்படுகின்றனர். தடுமாறும் சக மனிதனுக்கு தன்னால் முடிந்ததை... இயன்றதை செய்து இயல்பிற்கு மீட்பதே மனிதநேயத்தின் இலக்கணம். அந்தவகையில் மற்றவர்களின் வயிறை குளிரவைக்கும் இவர்களின் செயல்பாடு போற்றத்தக்கதே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT