Published : 15 Apr 2021 03:12 AM
Last Updated : 15 Apr 2021 03:12 AM
தமிழகத்தில் கரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதில், ஒரு பகுதியாக தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்தபடி தான் பயணம் செய்ய வேண்டும். நின்றபடி செல்ல பயணிகளுக்கு அனுமதி கிடையாது. அதேநேரத்தில் பேருந் தில் பயணம் செய்வோர் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத் துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைவாக காணப்படுகிறது. நகர் புறங்களை காட்டிலும் கிராமப்பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்து கள் பயணிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, விடுமுறை தினங் களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் பழைய, புதிய பேருந்து நிலையங் களில் இருந்து இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் வழக்கத்தை விட குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.
அரசுப் பேருந்துகளில் பெரும் பாலான இருக்கைகள் காலியாக காணப்பட்டன. அதனால், டிக்கெட் கட்டண வசூல் குறைந்துள்ளதாக நடத்துநர்கள் போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுத் தனர். ஆனால், எதிர்பார்த்த வசூல் ஆகாததால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை நிறுத்துவது என போக்குவரத்து கழக நிர்வாகம் முடிவெடுத்தது.
பேருந்துகள் நிறுத்தம்
இந்நிலையில், கடந்த 2 நாட் களுக்கு முன்பு சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது. சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை செல்ல விரும்பு வோர்களின் எண்ணிக்கை படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக, வேலூர் மண்டலத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 15 அரசுப் பேருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன. தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக பயணிகள் இல்லாமல் வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.
இதனால், சென்னை, தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய மேலும் 25 பேருந்துகள் நேற்று நிறுத்தப்பட்டன. சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த மொத்த பேருந்துகளில் 40 பேருந்துகள் இதுவரை நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகை யில், ‘‘வேலூர் மண்டலத்தில் இருந்து சென்னைக்கு 135 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் காரணமாக கடந்த சில நாட்களாக பயணிகள் கூட்டம் இல்லை. நேற்று முன்தினம் 15 பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. நேற்று காலை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை மிகக்குறைவாக இருந்தது. இதனால் கூடுதலாக 25 பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பிற மாவட்டங்கள் மற்றும் நகர் பகுதிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப சென்னைக்கு மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT