Published : 09 Apr 2021 05:59 PM
Last Updated : 09 Apr 2021 05:59 PM

செங்கல்பட்டில் தினமும் 100 காய்ச்சல் முகாம்கள்; 7 ஆயிரம் பேருக்கு கரோனா சோதனை: ஆட்சியர் பேட்டி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் | கோப்புப் படம்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தினமும் 100 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் ஒரு முகாமில் 100 பேர் வீதம் 10 ஆயிரம் பேருக்குக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் 7 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:

''செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதிய மருத்துவர்கள் இருப்பதால், கரோனா நோயைக் கட்டுப்படுத்த தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் சுமார் 100 பேர் பரிசோதனை செய்யப்படுகின்றனர். தினமும் 5,000 முதல் 7,000 வரை கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை ஆகிய துறைகள் சார்பில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரங்கிமலை, காட்டாங்குளத்தூர், திருப்போரூர் ஆகிய ஒன்றியங்களில் அதிக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிட் தடுப்பு நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் செய்தால் மட்டுமே நோய்த் தொற்றைத் தடுக்க முடியும். செங்கல்பட்டு மாவட்டத்தில் போதிய அளவு தடுப்பூசிகள் உள்ளன. 145 அரசு மையங்கள், 41 தனியார் மையங்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இதுவரை மாவட்டத்தில் 1,30,337 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். அதேபோல் 10,104 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். விமான நிலையத்தில் வரும் பயணிகளைக் கண்காணிக்கவும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிப் பகுதியில் மட்டும் வீடுகள்தோறும் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஒரு அரசு மருத்துவமனை, 7 தனியார் மருத்துவமனைகளில் போதிய கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் மக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாளை முதல் அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்''.

இவ்வாறு ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x