Published : 07 Apr 2021 05:36 PM
Last Updated : 07 Apr 2021 05:36 PM
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் ‘சீல்’ உடைக்கப்பட்டதாகக் கூறி மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தியுள்ளது.
காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு காரைக்குடி கம்பன் கற்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் (வாக்குச்சாவடி எண் 58) வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இந்திரத்திற்கு வைக்கப்பட்டிருந்த ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமெனவும் பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி பாஜக முகவர் குருபாண்டி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாக்குச்சாவடி எண் 58-ல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு ‘சீல்’ வைத்ததும், முகவர்கள் அனைவரையும் வாக்குப்பதிவு அலுவலர் வெளியேற்றினார்.
சில நிமிடங்களில் அந்த வாக்குச்சாவடியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் 3 பேர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தனர். இதை கேள்விப்பட்டதும் நாங்கள் அங்கே சென்றோம். அதற்குள் மூவரும் தப்பிவிட்டனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்த்தபோது ‘சீல்’ உடைக்கப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் துணையோடு வாக்குப்பதிவு இயந்திரம் ‘சீல்’ உடைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இந்திரத்தை வாகனத்தில் ஏற்றும் வரை வாக்குச்சாவடியில் முகவர்கள் இருக்கலாம். ஆனால் முகவர்களை வெளியேற்றிவிட்டனர். இதன்மூலம் முறைகேடு நடந்துள்ளது. இதனால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்குச்சாவடிக்குள் நுழைந்த சமூகவிரோதிகள், துணை புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது: சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் தலா ஒரு விவிபேட் இயந்திரம் பழுதடைந்தது. அதேபோல் காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்தது. அவற்றை மாற்றிவிட்டோம்.
மற்றபடி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களோ, முறைகேடுகளோ நடக்கவில்லை. இதனால் மறுவாக்குப் பதிவுக்கு வாய்ப்பே இல்லை, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT