Published : 04 Apr 2021 05:34 PM
Last Updated : 04 Apr 2021 05:34 PM
நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் வாக்குகளைப் பெற பிரதான அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக, திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 6-ம் தேதி நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை விற்காமல், ஓட்டுக்குப் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வாக்காளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும், தேர்தலில் வாக்குகளைப் பெற சில அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது மட்டுமின்றி சட்டத்திற்கும் எதிரானது. வாக்காளர்ளுக்குப் பணம் கொடுப்பதைக் கண்காணிக்கவும், தடுக்கவும் தொகுதிவாரியாகத் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 3 ஷிப்ட்டுகள் கொண்ட 21 தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை தொகுதிகளில் அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டைத் தொகுதிக்கு உட்பட்ட முத்தார்பட்டியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக திமுக ஒன்றியச் செயலர் முருகேசன் உள்ளிட்ட 3 பேர் மீது இருக்கன்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரைட்டன்பட்டியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தகாக ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மான்ராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சாத்தூர் மேலகாந்தி நகரில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாக சாத்தூர் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 2 பேர் மீது சாத்தூர் நகர் போலீஸாரும், சிவகாசி அருகே மாரனேரியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுக பிரமுகர் காசிராஜ் என்பவர் மீது மாரனேரி போலீஸாரும், அருப்புக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது அருப்புக்கோட்டை நகர் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோன்று, சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மேலாண்மறைநாடு கிராமத்தில் இன்னாசிராஜ் என்பவரது வீட்டில் வைத்து வாக்காளருக்குப் பணப்பட்டுவாடா செய்ததாக சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது ஆலங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT