Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை தழுவிய அதிமுக, தற்போது ஆறாவது முறையாக வெற்றிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் இரண்டாவது ஹாட்ரிக் வெற்றி பெறும் முயற்சியில் திமுகவினர் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர் பேரூராட்சி மற்றும் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சிகள், பழநி ஒன்றியத்துக்குட்பட்ட நான்கு கிராம ஊராட்சிகள் உள்ளன. தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. எனவே விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் விளையும் காய்கறிகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு ஏதுவாக தமிழகத்தில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஒன்றான காந்தி காய்கறி மார்க்கெட் இங்கு உள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் விரிவாக்கத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற நிலை உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட சொந்தமாக இடம் இல்லாததால் ரோட்டாரங்கள், குளங்களில் கொட்டி நகராட்சி நிர்வாகமே சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
பரப்பளவில் பெரிய ஒன்றியமான 38 கிராம ஊராட்சிகளை கொண்ட தொப்பம்பட்டி ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து கள்ளிமந்தயத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
1996 தேர்தல் முதல் திமுக சார்பில் போட்டியிட்ட அர.சக்கரபாணி தொடரந்து ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளார்.
தற்போதும் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரை எதிர்த்து ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது வேட்பாளர்களை நிறுத்திவந்த அதிமுக, இந்தமுறையும் விடாமுயற்சியாக ஆறாவது முறையாக புதிய வேட்பாளராக நடராஜன் என்பவரை நிறுத்தியுள்ளது. இவர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக வேட்பாளர் நடராஜனும் அயராது அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்கிறார். இவருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆறாவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி ஐந்துமுறை எம்.எல்.ஏ.வாக இருந்ததால் மக்கள் அறிமுகம் அனைத்து கிராமங்களிலும் உள்ளது. மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகம் பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவரது பிரச்சாரத்தை ஆங்காங்கே உள்ள ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒன்றியத் தலைவர்கள் என பதவியில் உள்ள கட்சியினர் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக கொண்டு செல்கின்றனர்.
இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒட்டன்சத்திரம் மெயின்ரோட்டில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்கு கேட்டார். பிரச்சாரத்தில் ஒருவருக்கு ஒருவர் ஈடுகொடுத்து செல்கின்றனர்.
அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் சிவக்குமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். அமமுகவினருடன் இணைந்து தேமுதிகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சக்திதேவி எளிமையான முறையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மநீம கூட்டணியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அப்துல்ஹாதி போட்டியிடுகிறார். இருந்தபோதும் அதிமுக, திமுக இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. விடாமுயற்சியாக ஆறாவது முறையாக போட்டியிடும் அதிமுக, இந்தமுறையாவது ஒட்டன்சத்திரம் தொகுதியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் களப்பணியாற்றி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT