Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக போட்டியிடுகிறது. வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரித்தனர்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் பிரச்சாரம் செய்து, கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளார்.
பிரச்சாரம் செய்யவில்லை
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இங்கு பிரச்சாரம் செய்யவில்லை. திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளின் முன்னணி தலைவர்களும் தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும்போது திமுக கூட்டணியின் பிரச்சாரம் சற்று அதிகமாகவே இருந்தது.
மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. அது மட்டுமின்றி கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக தலைவர்களும் தென்காசி மாவட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வரவில்லை. இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக இந்த தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறது. மற்ற 4 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான அமமுக போட்டியிடுகிறது.
தேமுதிகவினர் குற்றச்சாட்டு
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. அத்துடன் ஆலங்குளத்தில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டவில்லை என்று அக்கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் விட்டுக்கொடுத்து விட்டது. வேட்பாளர்களை ஆதரித்து சமக தலைவர் சரத்குமார், முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் தென்காசி மாவட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதேபோல், மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. தென்காசி மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு காலத்தில் வலுவான வாக்கு வங்கி இருந்தது. ஆனால், காலப்போக்கில் வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டது. வேட்பாளர்களை ஆதரித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இங்கு பிரச்சாரம் செய்யவில்லை.
இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது சுய பிரச்சாரத்தையே நம்பி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பின்னடைவு
முக்கிய கட்சிகளுக்கே இந்த நிலை என்பதால் சுயேச்சைகளை பிரச்சாரத்தில் பார்ப்பதே அரிதாக இருக்கிறது ஆலங்குளத்தில் சுயேச்சையாக போட்டியிடும் அ.ஹரி, அவருக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் ராக்கெட் ராஜா ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர். வெற்றிதான் நோக்கம், இரண்டாம் இடம் லட்சியம், மூன்றாம் இடம் நிச்சயம் என்ற நம்பிக்கையோடு அக்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதில் இருந்து 13 நாட்கள் மட்டுமே பிரச்சாரத்துக்கு கால அவகாசம் இருந்ததால் பெரும்பாலான தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது சிறிய கட்சிகளை மட்டுமின்றி பெரிய கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சைக் கேட்க விடிய விடிய மக்கள் காத்திருந்த நிலை உண்டு. ஆனால் இப்போது தொழில்நுட்பம் முன்னேற்றத்தால் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாக தலைவர்களின் பிரச்சாரம் மக்களை எளிதில் சென்றுவிடுகிறது. அதனால் பிரச்சார உத்தியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT