Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM
அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரெட்டியாபட்டி பகுதியில் பிரச் சாரம் மேற்கொண்டார்.
அப்போது வைகோ பேசிய தாவது: தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதர வாக அதிமுகவினர் வாக்களித் தனர். டெல்லியில் 150 நாட்களாக போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
அதிமுக அரசு குறித்து ஊழல் புகார் தெரிவித்த ஸ்டாலின், அது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தார். ஆனால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்டாலின் முதல்வரானதும் இந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம், மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படும். பனைத் தொழில் ஊக்குவிக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். பயிர் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தனி ஒருவர் நிலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படும். ஏரி குளங்களை தூர்வார ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
என்னுடைய பொது வாழ்வில் 23 ஆண்டுகள் திமுகவில் இருந்துள்ளேன். 5 ஆண்டுகள் சிறையில் இருந் துள்ளேன். 32 முறை சிறை சென்றுள்ளேன். என்னுடைய தாயார் மதுக்கடையை எதிர்த்து போராடி உண்ணாவிரதம் இருந்தார். அதன் பின்னர் அவர் உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். நாட்டுக்காக போராடி உயிரிழந்தவர் என் தாய். என்னுடைய பொதுவாழ்க்கையில் என் குடும்பத்தில் 2 உயிர்களை இழந்துள்ளேன். அந்த உரிமையில் கேட்கிறேன். திமுகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT