Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM

அனைத்து கிராமங்களுக்கும் பாலாற்று குடிநீர் சாத்தியமா?- வேட்பாளர்களின் வாக்குறுதியால் சந்தேகம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான, பாதுகாப்பான பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குறுதி அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது நடைமுறையில் சாத்தியமா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் கஜேந்திரன், திமுக சார்பில் ம.வரலட்சுமி, அமமுக சார்பில் சதீஷ்குமார், மநீம கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சியின் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் சஞ்சீவிநாதன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நகர மற்றும் கிராமங்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் என பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்து வருகின்றனர். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே பாலாற்று படுகையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை. வாரத்துக்கு ஒரு முறையும் 15 நாளுக்கு ஒரு முறையும் என்ற அளவில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில் மற்ற கிராமங்களுக்கு எவ்வாறு பாலாற்று குடிநீர் வழங்க முடியும் என்ற கேள்வியை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். வேட்பாளர்கள் கண்டபடி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாகவும், நிறைவேற்ற முடியாத திட்டங்களை தெரிவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: ஏற்கெனவே பாலாற்றுப் படுகையிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு பல்வேறு கிராமங்கள் நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவே முறையாக நடைபெறவில்லை. அப்படியிருக்க தொகுதி முழுவதும் எப்படி பாலாற்று குடிநீர் வழங்க முடியும்? செங்கல்பட்டு தொகுதியில் ஏற்கெனவே, பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு முடங்கியுள்ளன. புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

இது தவிர தொகுதி வளர்ச்சிக்கு ஏற்புடையதாக உள்ள எந்த திட்டத்தையும் இதுவரை இருந்த எம்எல்ஏக்கள் கொண்டு வரவில்லை. புதிதாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் செங்கல்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x