Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM
ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகவே போகட்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.
பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கம்மாபுரத்தில் நேற்று புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து பேசியது:
40 வருட தியாக போராட்டம் 21 உயிர்களை வாங்கியது. தற்போது 10.5 சதவீத தனிஒதுக்கீட்டை முதல்வர் பழனிசாமி வழங்கினார். அவரை மறக்க முடியாது. அனைத்து சமுதாயத்தின ருக்கும் தனித்தனி இடஒதுக் கீடு வழங்க வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. தமிழ்நாட்டில் 70 ஆண்டிற்குப் பிறகு விவசாயி ஒருவர் முதல்வராக வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் முதல்வர் பழனிசாமியை முதல்வராக்க வேண்டும்.
விவசாய குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் தான் முதல்வராக வேண்டும் என விவசாயிகள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்து விட்டனர். ஸ்டாலின் அரசியல் வியாபாரி. விவசாயத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. ஸ்டாலினுக்கு எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஆத்திரமாக மாறியுள்ளது. அவருக்கு கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு ஒரு தகுதியும் இல்லை. திமுக ஒரு கம்பெனி. கட்சி அல்ல. அவர்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் அங்கு பொறுப்புக்கு வர முடியாது.
திமுகவால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். ராஜா, முதல்வரின் தாயார் பற்றி தவறாக பேசினார் .ஸ்டாலின் அதனை ரசிக்கிறார். தமிழ்நாட்டு ஒட்டுமொத்த பெண்களும் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள, பெண்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய், 6 சிலிண்டர், சுய உதவிக் கடன் தள்ளுபடி , 100 நாள் வேலை திட்டம் 150 நாள் ஆக உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இலவசம் அல்ல. அத்தியாவசியம். ஆனால் திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது. நாமம் தான் போடுவார்கள். அந்த கட்சி பிரசாந்த் கிஷோரை நம்பியே உள்ளது. ரூ. 700 கோடி செலவு செய்து எப்படியேனும் தன்னை முதல்வராக்கி விடுங்கள் என பிரசாந்த் கிஷோரிடம் சென்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார். நமது கூட்டணி சமூக நீதி கூட்டணி. சமூக நீதி என்றால் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது .ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகவே போகட்டும். அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT