Published : 30 Mar 2021 03:17 AM
Last Updated : 30 Mar 2021 03:17 AM

கிராம பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி

திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருவண்ணாமலை

கிராம பொருளாதார முன்னேற்றத் துக்கான திட்டங்களை செயல் படுத்துவோம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதி அளித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ஆடு, மாடு, கோழி வளர்ப்பது கேவலமில்லை. இவைகள் அனைத்தும் மனிதர் உயிர் வாழ தேவைப்படுகிறது. இதன் கழிவு மூலம் இயற்கை விவசாயம் செய்து,நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யமுடியும். அரசின் திட்டங்களுக்கு பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது. அதனால், விவசாய பணியை அரசு பணியாகஉருவாக்கப்படும். பன்னாட்டு குளிர் பானங்கள் விற்பனையை அனு மதிக்கக்கூடாது. அதற்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கும் போது விவசாய உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளும் பயன்பெறுவர்.

தலைசிறந்த கல்வியை நான் தருகிறேன். தமிழ் பயிற்று மொழியாக இருக்கும். தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும். உலக தொடர்பு மொழிக்காக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளலாம். தாய்மொழியில் கல்வி கற்றவர்கள் சிறந்து விளங்குகின்றனர். தமிழ் படித்தவர்களுக்கு தான் தமிழகத்தில் வேலை என்ற நிலையை உருவாக்கிவிட்டுதான் நான் செல்வேன்.தமிழ் என்பது பெரும் கடல். உலகின் மூத்த மொழி. ஆட்சி மொழியாக தமிழ் இல்லை என்றால் அதிகாரத்தில் இருந்து என்ன பயன்.

வெளிநாட்டுக்கு செல்லும் போது, அந்நாட்டில் சட்ட திட்டங்களை நம் மக்கள் கடைபிடிக் கின்றனர். ஆனால், நம் நாட்டுக்கு வந்ததும், சாலைகளை அசுத்தம் செய்கின்றனர். இதற்கு கட்டுப் பாடற்ற சுதந்திரம்தான் காரணம். அதனை சரி செய்ய வேண்டும். அரசு மருத்துமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படும். நிலம், வளம் சார்ந்த தொழிற்சாலை உருவாக்கப்படும். அப்போது கிராம பொருளாதாரம் பெருகும். கிராமப்புறங்கள் காலியாகாது. நகர பகுதிகளுக்கு தடையின்றி உணவு கிடைக்கும். வேலையில்லை என்ற சொல் இருக்காது. இதுதான் சரியான ஆட்சி முறை. எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x