Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் நேற்று இரவு சுவாமி குமரவிடங்கப் பெருமான்- வள்ளி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து வள்ளி அம்மன் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளினார்.
பின்னர் மாலையில் கோயிலில் இருந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் புறப்பாடாகி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். தொடர்ந்து சுவாமியும், அம்மனும்கீழ ரதவீதி, பந்தல் மண்டபம் முகப்புக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
பின்னர் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்து கோயிலை சேர்ந்தனர். இரவு கோயிலில் உள்ள 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT