Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை சட்டப்பேரவைத் தொகுதியின் அடையாளம் சுற்றுலா. சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றசுற்றுலாத்தலம். உதகை தாவரவியல் பூங்கா,படகு இல்லம், தென்னிந்தியாவின் 2-வது உயரமான தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா, மலை ரயில் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் உதகை, குந்தா ஆகிய இரண்டு வட்டங்களும், உதகை நகராட்சியும், குந்தா, நஞ்சநாடு, சோலூர் ஆகிய 3 பேரூராட்சிகளும், 9 சிற்றூராட்சிகளும் உள்ளன.
நகரப் பகுதிகளைவிட கிராமப் பகுதிகளே அதிக அளவில் காணப்படும் இத்தொகுதியில் 75 சதவீதத்தினர் விவசாயத்தையும், 25 சதவீதத்தினர் சுற்றுலாவையும் சார்ந்துள்ளனர். உதகை தொகுதியில் 35 சதவீதம் படுகர் சமுதாயத்தினரும், 30 சதவீதம் இஸ்லாமியர்களும், 5 சதவீதம் கிறிஸ்தவர்களும், எஞ்சிய 10 சதவீதம் மலையாளிகள், கன்னடர்கள் உள்ளனர்.
எதிர்பார்ப்புகள்
ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் உதகையில், அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லை. ஹெலிகாப்டர் சேவை, மருத்துவ ஹெலிகாப்டர் சேவை, ரோப் கார் சேவை, நகரத்தில் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் பல ஆண்டுகள் கனவாகவே உள்ளன. இதனால், பார்த்த இடங்களையே பார்த்து சலிப்படைகின்றனர்.
உதகையில் தரமான பொதுக் கழிப்பிடங்கள் ஏற்படுத்துவதுடன், தனியார் தங்கும் விடுதிகளில் அதிகபட்ச வாடகை, சுற்றுலா வாகனங்களில் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவோம், நலிவடைந்துள்ள மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹெச்.பி.எஃப். தொழிற்சாலை புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிறுவனத்தை மத்திய அரசு மூடிவிட்டது.
மருத்துவக் கல்லூரி
நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி, உதகையில் ரூ.447கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தாங்கள்தான்என பாஜக, காங்கிரஸ், அதிமுக என அனைத்து கட்சிகளுமே உரிமை கோருகின்றன. உதகை பேருந்து நிலையம் ரூ.4 கோடியில் புனரமைக்கப்பட்டதுடன், குதிரை பந்தய மைதானத்தில் 4 ஏக்கரில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டதால், போக்கு வரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது.
பலம், பலவீனம்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.கணேஷூக்கு திமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும், பாஜக எதிர்ப்பு வாக்குகளும் பலமாக உள்ளன. கோத்தகிரியை சேர்ந்த பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் இறக்குமதி வேட்பாளர் என்ற பெயரோடு வலம் வருவதும், தொகுதியில் சாதாரண மக்களுக்கு அறிமுகம் இல்லாதவராக இருப்பதும், அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கும் என்பதும்பலவீனமாக கருதப்படுகிறது. இவருக்கு ஆதரவாக தொகுதியின் பொறுப்பாளராக கர்நாடக மாநில கூட்டுறவுதுறை அமைச்சர் சோமசேகர், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் பிரச்சாரம் செய்வது பலம். மக்களவைதேர்தலில் நீலகிரி தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதியுள்ளன. இந்நிலையில், முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் உதகை தொகுதியில் இவ்விரு கட்சிகளும்நேருக்கு நேர் மோதுகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் எல்லையான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளார். இந்நிலையில், உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவை வெற்றி பெறச்செய்துவிட வேண்டும் என்பதில் கட்சியினர்தீவிரமாக இருப்பதால், கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக மாறியுள்ளது உதகை சட்டப்பேரவைத் தொகுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT