Published : 27 Mar 2021 06:09 PM
Last Updated : 27 Mar 2021 06:09 PM
புதுச்சேரிக்கு வரும் மத்திய அமைச்சர்கள் மூன்றாம் தரமாக பேசுவது வேதனை அளிப்பதாக, முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும், திருநள்ளாறு தொகுதி வேட்பாளருமான ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நல்லெழந்தூர் பகுதியில் வீடு வீடாகச் சென்று இன்று (மார்ச் 27) வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"காரைக்கால் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசு அளித்த ரூ.15 ஆயிரம் கோடி நிதியை மக்களுக்காக செலவிடாமல் சோனியா காந்தி குடும்பத்துக்கு நாராயணசாமி அனுப்பிவிட்டதாக அபாண்டமாக குற்றம் சுமத்தினார். புதுச்சேரிக்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் வேளாண்மை திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தவில்லை, ரேஷன் கடைகளை திறக்கவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காரைக்கால் வந்த அமைச்சர் கிரிராஜ் சிங்கும் இது போலவே பேசிச் சென்றுள்ளார்.
ரேஷன் கடைகளை திறக்காமல் முடக்கியது துணைநிலை ஆளுநர்தான். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் மாநிலத்தில் முறையாக அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தின் துறைகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால்தான் கல்வி, வேளாண்மை, சுகாதாரத்துக்கான விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
நிதித்துறை செயலாளர், தலைமைச் செயலாளர், துணைநிலை ஆளுநர் அனுமதியின்றி எந்த வகையிலும் நிதியை செலவு செய்ய முடியாது. இதை தெரிந்துகொண்டும், கடந்த 5 ஆண்டுகளில் பல முறை முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசியபோது எந்த ஆதரவும் தராமலும், தற்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மூன்றாம் தரமான வகையில் மத்திய அமைச்சர்கள் பேசி வருவது வேதனையளிப்பதாக உள்ளது.
மாநில அரசில் எனக்கு அளிக்கப்பட்ட 7 துறைகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. மத்திய அரசே இதனை பாராட்டியுள்ளது. அமைச்சரவை எடுக்கும் முடிவை செயல்படுத்த அனுமதியளிப்பது, துணைநிலை ஆளுநரும், தலைமைச் செயலாளரும்தான். அவ்வாறு மக்கள் நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்த விடாமல் தடுத்த இவர்கள் மீதுதான் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் தடுக்க முற்பட்ட நிலையில், மத்திய அரசு அம்முடிவை திணித்தது. புதுச்சேரியில் உள்ள வளம் அனைத்தும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. பாஜகவால் எந்த வளமும் ஏற்படவில்லை. புதுச்சேரி மக்களை ஏமாற்றிவிடலாம் என பாஜக நினைக்கிறது. தேர்தலுக்குப் பின் அவர்கள்தான் ஏமாற்றம் அடைவார்கள்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT