Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM
சென்னை, வேலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் 47-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டுசம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக துப்புதுலக்க டிஎஸ்பி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி டேவிஸ்புரத்தில் பதுங்கியிருந்த வேலூர் மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜா (31) என்பவரை கைது செய்தனர்,
சென்னையில் தனியார் நிறுவன காவலாளியாக அவர் வேலைபார்த்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. அப்பன்ராஜா, அப்பு, ராஜா எனபல்வேறு பெயர்களில் சுற்றித் திரிந்துள்ள அவர் மீது சென்னை, வேலூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 47-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தனது 14 வயதில் திருட்டு வழக்கில் பிடிபட்டு அவர் சிறுவர் சிறைக்கு சென்றுள்ளார். இருமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளையடித்த பணத்தில் சொகுசு வாழ்கை, போதைப்பழக்கம், ஆடம்பர ஆடைகள் என செலவு செய்து வந்துள்ளார். இருமாதங்களுக்கு மேல் ஒரு ஊரில் தங்குவதில்லை என்ற வழக்கத்தை கடைபிடித்து வந்துள்ளார். ஒரு ஊரில் போலீஸார் தன்னை தேடுவது தெரிந்தால் அடுத்த ஊருக்கு சென்று கைவரிசை காட்டி வந்துள்ளார்.
வேறு ஊர்களில் இருந்து பைக்குகளை திருடிவந்து கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். பைக் திருட்டு வழக்குகளும் அப்பன்ராஜா மீது உள்ளன. சென்னையில் போலீஸார் தேடியதால் தூத்துக்குடிக்கு வந்து திருட்டில் ஈடுபட்ட நிலையில் போலீஸில் சிக்கியுள்ளார். போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை எஸ்பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT