Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM
மோடி பண மதிப்பிழப்பு செய்ததுபோல் அவரையும், பழனிசாமியையும் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும். என்று திமுக மாநில இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகரில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சாத்தூரில் மதிமுக வேட்பாளர் ரகுராம் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியதாவது:
தமிழக மக்கள் ஜிஎஸ்டியாக ரூ15 ஆயிரம் கோடி கொடுத்துள்ளனர். இதில் தமிழகத்தின் பங்கை அளிக்க மோடி மறுக்கிறார். நிதி பற்றாக்குறை என்கிறார். ஆனால் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரு விமானங்கள் வாங்கியுள்ளார். மோடி பண மதிப்பிழப்பு செய்தது போல் அவரையும், பழனிசாமி யையும் மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்.
ஜெயலலிதா இருந்தபோது மோடியா?, இந்த லேடியா? என்று கூறினார். ஆனால், மோடிதான் எங்கள் டாடி என்கிறார் கே.டி.ராஜேந்திபாலாஜி.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும். கரோனா நிவாரணத் தொகையாக ரூ.4,000 வழங்கப்படும்.
நீட் தேர்வு காரணமாக அனிதா உயிரிழந்தார். அவர் மட்டுமல்ல தொடர்ந்து 14 மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
இந்த மாவட்டத்துக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம், விருதுநகரில் ராமமூர்த்தி ரயில்வே மேம்பாலம், அல்லம்பட்டியில் ரயில்வே கீழ்பாலம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதுதான் இவர்கள் கட்டிய எய்ம்ஸ்
பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது செங்கல், பால் டப்பா, தெர்மகோல் ஆகியவற்றைக் காண்பித்து இது எந்த அமைச்சர் எனப் பொது மக்களிடம் கிண்டலாகப் பேசினார்.
இதேபோல் சாத்தூரில் பேசும் போது, மதுரையில் இருந்து வரும் வழியில் அதிமுக, பாஜக அரசுகள் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கையோடு கொண்டு வந்துள்ளேன் எனக் கூறி ஒரு செங்கலைக் காண்பித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT