Published : 24 Mar 2021 03:16 AM
Last Updated : 24 Mar 2021 03:16 AM

ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக ‘‘100 சதவீதம் வாக்களிப்பீர்’’ ‘‘வாக்களிப்பது நமது கடமை’’ தேர்தல் நாள் 6.4.2021 என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் ‘100 சதவீதம் வாக்களிப்பீர், வாக்களிப்பது நமது கடமை’ என்ற விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படவுள்ளன. இதனை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், ஆவின் பொது மேலாளர் பார்த்தசாரதி, துணை பதிவாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக நடந்த கிராமங்கள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், காஸ் சிலிண்டர்கள் மீதும் ஸ்டிக்கர் மூலம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது’’ என்று தெரிவித்தார். வேலூர் ஆவின் மூலம் தினசரி 1 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x