Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

நேர்மையான பல திட்டங்களை பழனிசாமி தந்துள்ளார்; அதிமுகவின் தேர்தல் அறிக்கை அள்ள அள்ள குறையாத அமுதசுரபி: நெய்வேலி பிரச்சாரத்தில் ராமதாஸ் பெருமிதம்

நெய்வேலி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து சத்திரம் குறுக்கு ரோட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடலூர்

கடந்த 4 ஆண்டுகளில் நேர்மையான பல திட்டங்களை முதல்வர் பழனிசாமி அளித்துள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்றது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி பாமக வேட்பாளர் கோ.ஜெகனை ஆதரித்து சத்திரம்,முத்தாண்டிக்குப்பம் ஆகிய இடங்களில் நேற்று இரவு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சத்திரம் கிராஸ் ரோடு சந்திப்பில் அவர் பேசியதாவது:

‘என்னால் தான் ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார்’

“கருணாநிதி எப்போதும் எனது யோசனைகளை கேட்பார். ஸ்டாலினுக்கு ‘துணை முதல்வர்’ பொறுப்பை தர, கருணாநிதியிடம் சொன்னதே நான் தான். மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது, தமிழகத்திற்கு இருண்ட காலமாக அமைந்து விடும். மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது தான் தஞ்சை தரணியை பாலைவனம் ஆக்கினார். இன்று, முதல்வர் பழனிசாமி அதனை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக உருவாக்கி, விவசாயிகளின் வாழ்வில் ஏற்றத்தை உருவாக்கியுள்ளார்” என்றும் இப்பிரச்சாரத்தில் பங்கேற்ற ராமதாஸ் தெரிவித்தார். நெய்வேலி தொகுதியை சிறப்புற நிர்வகிப்பதற்கு பாமக வேட்பாளர் ஜெகனிடம் நல்ல பல திட்டங்கள் உள்ளன.

எங்கள் கூட்டணியில் உள்ள அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது. அள்ள அள்ள குறையாத பல திட்டங்களை அந்த தேர்தல் அறிக்கை கொண்டுள்ளது. பாமக வின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கானது. பெண்களுக்கு வாஷிங் மெஷின், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள், சோலார் அடுப்பு என எண்ணற்ற பயனுள்ள திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நல்லாட்சி தொடர்ந்திட தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் முதல்வர் பழனிசாமி நல்ல நேர்மையான பயனுள்ள திட்டங்களை மட்டுமே தந்துள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வைத்து என்ன செய்வது என்றேதெரியவில்லை. ஆனால் முதல்வர் நாற்காலி வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுகிறார். பாமக வின் 10 அம்ச திட்டத்தில் பாதுகாக்கப்பட்ட டெல்டா மாவட்டமும் ஒன்று.

அப்பகுதியை பாலைவனமாக்கி, மீத்தேனுக்காக கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின் என்றுதெரிவித்தார். இப்பிரச்சாரத்தில் பாமக சொத்து பாதுகாப்புக்குழுதலைவர் டாக்டர்.கோவிந்தசாமி,மாநில வன்னிய சங்க தலைவர்பு.தா அருள்மொழி, மாநில துணை பொதுச்செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x