Published : 20 Mar 2021 05:31 PM
Last Updated : 20 Mar 2021 05:31 PM
ஆட்சிக்கு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக மட்டும் தேர்தல் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்முடைய சுய மரியாதையை நாம் காப்பாற்ற வேண்டும். மதவெறியைத் தூண்டி, நாட்டை குட்டிச் சுவர் ஆக்குவதற்கான முயற்சியில் பிரதமராக இருக்கும் மோடி முயன்று கொண்டிருக்கிறார். அதற்கு நாம் பாடம் கற்பிக்கத்தான் இந்தத் தேர்தல் என ஸ்டாலின் பேசினார்.
கன்னியாகுமரி, தக்கலையில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
''நம்மைப் பார்த்துக் கேட்கும் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்களே, என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?
அவருடைய துறை நெடுஞ்சாலைத் துறை. அந்தத் துறையில் கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர் அவருடைய சம்பந்திக்கு - சம்பந்தியின் சம்பந்திக்கு விடப்பட்டிருக்கிறது. இதை ஆதாரத்தோடு நம்முடைய கட்சியின் வழக்கறிஞர் - மாநிலங்களவை உறுப்பினர் - அமைப்புச் செயலாளர் பாரதி கண்டுபிடித்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதில் முகாந்திரம் தெளிவாக இருக்கிறது. இதை முறையோடு விசாரிக்க வேண்டும் என்றால் சிபிஐதான் விசாரிக்க வேண்டும். எனவே சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறேன் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பழனிசாமி சந்திக்க வந்தாரா? தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் - துணிவிருந்தால் - திராணி இருந்தால் நேரடியாக சிபிஐ வழக்கை அவர் சந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு சந்தித்திருந்தால் அவர் இன்றைக்கு முதல்வர் இல்லை. அவர் சிறையில்தான் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட அடுத்த நாளே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கிவிட்டார். அதனால்தான் இன்றைக்கு அவர் வெளியில் இருக்கிறார்.
ஆனால், ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. அவ்வாறு வந்ததற்குப் பிறகு அவர் வெளியில் இல்லை. ஜெயிலுக்குள்தான் இருக்கப் போகிறார். கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தை முடிவு செய்து உறவினர்களுக்குக் கொடுத்தாரா? கொடுக்கவில்லையா? இதற்கு பதில் சொல்லட்டும்.
இப்படி டெண்டர் பெற்றவர்கள் பழனிசாமிக்கு என்ன உறவு? என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கிறது. இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்? உலக வங்கி நிதியில் உறவினர்களுக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என்ற விதியே இருக்கிறது. அந்த விதியை மீறி அவர் கொடுத்திருக்கிறார். அப்படி கொடுத்த நேரத்தில் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை இதை விசாரிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள். இதற்கு முதல்வராக இருக்கும் பழனிசாமி என்ன பதில் சொல்லப் போகிறார்?
முதல்வருடைய பினாமிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது நகைகள், பணம் எல்லாம் கிடைத்துள்ளன. இந்தக் கேள்வியை நீதிபதிகள் நீதிமன்றத்தில் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?
4000 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதா இல்லையா? இதற்கு பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார்?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு ஒரு உத்தரவு போட்டது. அவ்வாறு உத்தரவு போட்ட சில நாட்களில் ஈரோட்டில் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அவர் பெயர் அன்புநாதன்.
தமிழக அரசின் பல்வேறு டெண்டர்களை எடுப்பவர் பெருந்துறை சுப்பிரமணியம். அவருக்கும் பழனிசாமிக்கும் என்ன உறவு? அதை பழனிசாமி சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா? நான் சொல்கிறேன். சுப்பிரமணியத்தின் ஒரு மகளை தனது மகனுக்குத் திருமணம் செய்து வைத்து இருக்கிறார். சுப்பிரமணியத்தின் இன்னொரு மகளுக்கு ராமலிங்கம் மகனோடு திருமணம் செய்து வைத்திருக்கிறார். அவர் சம்பந்தியின் சம்பந்தி. இவர்கள்தான் பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர் எடுப்பவர்கள். பணம் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய பின்புதான் பாஜகவின் பாதம் தாங்கிய பழனிசாமியாக இன்று அவர் ஆகியிருக்கிறார். பிறகு சசிகலாவிற்கு துரோகம் செய்தார். அதற்குப் பிறகு பன்னீர்செல்வத்தை இணைத்துக் கொண்டார். இப்போது அதிமுகவைப் பொறுத்தவரையில் பாஜகவின் கிளைக் கழகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை. இதை பழனிசாமி மறுக்கமுடியுமா?
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவிடம் இன்றைக்கு மாநில அரசின் அதிகாரங்கள் - உரிமைகள் அனைத்தையும் தூக்கிக் கொடுத்து விட்டார். விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று ஆதாரத்தோடு சொல்லி இருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சட்டப்படி முறைப்படி செய்ய வேண்டும் என்பதற்காக நாம் கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும்.
ஆனால், உறுதியாகச் சொல்கிறேன். மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. அவ்வாறு எண்ணப்பட்ட மறுநாள் நாம் ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வந்த பிறகு நிச்சயமாக இவை அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்படிப்பட்டவர்களின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய உரிமைகள் அத்தனையும் பாஜகவிடம், மோடியிடத்தில் அடமானம் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் தலைவராக சொல்லிக் கொண்டிருக்கும் அம்மையார் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், ஜிஎஸ்டி. சட்டத்தை ஆதரிக்க முடியாது. உதய் மின் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நீட் தேர்வை ஆதரிக்க முடியாது. உணவப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் அவர் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு பிறகு என்ன நடந்தது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த உண்மையும் வெளிவரவில்லை.
எனவேதான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், திட்டங்களை நிறைவேற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும் முதல்வராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து நாட்டுக்கு அடையாளம் காட்டுவது நம்முடைய கடமை என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால் அம்மா, அம்மா என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் அம்மாவின் லட்சியத்தைக் காப்பாற்றி விட்டார்களா?
திடீரென்று சிறுபான்மையினருக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது போல ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து சட்டத்திற்கு ஆதரித்தவர்கள் நீங்கள், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் நீங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தவர்கள் நீங்கள். நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு அதிமுக எம்.பி. இருக்கிறார். அவர் அதிமுக எம்.பி. அல்ல, அவர் பாஜக எம்.பி.யாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால் ஒரு அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக. உறுப்பினராகத்தான் செயல்படுவார். எனவே, அதிமுக வெற்றி பெறக்கூடாது. பாஜகவும் வெற்றி பெறக்கூடாது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விட மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது அதை ஆதரித்துப் பேசியவர்கள் நீங்கள். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நாங்கள் ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று இப்போது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். பத்தாண்டுகளாக எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இப்போது தேர்தல் வரும் காரணத்தால் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட உறுதிமொழிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் இந்த ஆட்சியைத் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் ஆளவில்லை. டெல்லியில் இருப்பவர்கள்தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
அண்ணா - கருணாநிதி இருந்தபோது மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தார்கள். அது இன்றைக்குப் பறிபோய்க் கொண்டிருக்கிறது. எனவே இதற்கெல்லாம் நாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இன்றைக்கு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் தேர்தல் நடக்கிறது என்று நினைக்காதீர்கள். நம்முடைய சுய மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். அதற்காக இந்தத் தேர்தல் நடக்கிறது. மதவெறியைத் தூண்டி, நாட்டை குட்டிச் சுவர் ஆக்குவதற்கான முயற்சியில் இன்றைக்கு மத்தியில் பிரதமராக இருக்கும் மோடி முயன்று கொண்டிருக்கிறார். அதற்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்.
மோடியும் - அமித் ஷாவும் சேர்ந்துகொண்டு இந்த நாட்டை குட்டிச் சுவராக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு பல மாநிலங்களில் அதை செய்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் யாரும் உள்ளே நுழைய முடியாது. இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT