Published : 18 Jun 2014 10:04 AM
Last Updated : 18 Jun 2014 10:04 AM

பல்வேறு திட்டங்கள் மூலம் 12,730 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை- ராமதாஸுக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதில்

பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 12,730 மெகாவாட் மின்சாரம் இந்த அரசால் கூடுத லாக கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகன் நலம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நலம் ஒன்றையே சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் முதல்வரிடம் மின் திட்டங்கள் தொடர்பாக பத்து கேள்விகளை எழுப்பியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.

எண்ணூர் விரிவாக்கம்

660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கத் திட்டம் தாமதப்படுத்தப்படுவதாக கூறியிருப்பது உண்மையல்ல. இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, மத்திய அரசால் 24.1.2013-ல் வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, திட்டத்துக்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ராடெக் நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. கட்டுமானப் பணியை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதேபோல், 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்துக்கான மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கடந்த ஜனவரி 7-ம் தேதிதான் வழங்கப்பட்டது. அதற்கு பல மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இடையில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, இதற்கான பணி ஆணை விரைவில் வழங்கப்படும்.

அதேபோல 1,320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மின்வாரிய பரிசீலனையில் உள்ளன. அதுவும் இறுதி செய்யப்பட்டு, பணி ஆணை விரைவில் வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப் படுவதே சரியான முறை. இருந்தா லும், மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதால், மிகுந்த மதிநுட்பத்துடன், அசாதாரணமாக சிந்தித்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னரே ஒப்பந்தப் புள்ளிகள் கோர முதல்வர் ஆணையிட்டதால்தான், விரைவாக பணி ஒப்பந்தம் இறுதி செய்யும் நிலையை எட்டியிருக்கிறோம்.

10 ஆயிரம் மெகாவாட்

தமிழகத்தில் 10 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வட சென்னை, மேட்டூர் மற்றும் வல்லூர் மின் திட்டங்களை விரைவுபடுத்தி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டது. கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அலகு முழு உற்பத்தி நிலை அடைந்ததன் மூலம் 562 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தமிழகத்துக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

தற்போது நடந்து வரும் வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு, தூத்துக்குடியில் கூட்டு மின் திட்டம் ஆகியவை உள்பட 2,000 மெகாவாட் கூடுதல் நிறுவு திறன் இந்த நிதியாண்டில் (2014-15) உருவாக்கப்படும். 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நீண்டகால ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பலன் படிப்படியாக தமிழகத்துக்கு கிடைக்க உள்ளது. இவை உள்பட மேலும் பல திட்டங்கள் மூலம் தமிழகத்துக்கு 12,730 மெகாவாட் மின்சாரம் இந்த அரசால் கூடுதலாக கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழகத்தின் நீண்டகால மின் தேவையை நிறைவேற்றும் வகையில் எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் (660 மெகாவாட்), உப்பூர் அனல் மின் திட்டம் (2x800 மெகாவாட்) வட சென்னை அனல் மின் திட்டம் 3-ம் நிலை (800 மெகாவாட்), உடன்குடி அனல்மின் திட்ட விரிவாக்கம் (2x660 மெகாவாட்), தூத்துக்குடி அனல்மின் திட்டத்துக்கான மாற்று திட்டம் (2x660 மெகாவாட்) என 5,700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கோரப்படுவது, ஏதோ அரசு கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்படுவது போன்றது என்ற தனது அறியாமையைத்தான் ராமதாஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் விசுவநாதன் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x