Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

கிருஷ்ணகிரியில் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதாக புகார்: எச்சரிக்கை பலகை வைத்த பொதுமக்கள்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட மோகன்ராவ் காலனியில் நகராட்சி குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்து வைக்கப்பட்டுள்ள தகவல் பலகை.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட மோகன் ராவ் காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குறிப்பாக பெங்களூரு சாலையில் இருந்து முருகன் தியேட்டர் வரை செல்லும் சாலையில் கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சீரற்ற நிலையில் உள்ளதாக புகார் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் ‘நகராட்சி குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது, பொதுமக்களே உஷார்’ என வாசகம் எழுதிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சில மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. தொடர் கோரிக்கையை ஏற்று புதிய கால்வாய் அமைத்தனர். அதுவும் ஒரே சீராக அமைக்கப்படவில்லை.

இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ஒரு இடத்தில் வால்வுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒட்டியவாறு சாக்கடை கால்வாய் செல்கிறது. இதனால் குடிநீர் தொட்டியில் சாக்கடை நீர் நிரம்பிவிடுகிறது. இப்பகுதியில் தண்ணீர் திறந்துவிடும் போது, குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது.

இதுதொடர்பாக புகார் அளித்தாலும், நகராட்சி ஊழியர்கள் பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துவிட்டு செல்கின்றனர். ஆனால், இதற்கு உரிய நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை. எனவே, இங்கு வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் தொட்டிக்குள் கழிவுநீர் கலப்பதை தடுக்க நிரந்தர தீர்வை தொடர்புடைய அலுவலர்கள் எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x