Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 37 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்: வந்தவாசியில் மிதிவண்டியில் வந்து தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

திருவண்ணாமலையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் இரா.அருள் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அடுத்த படம்: கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பாமக வேட்பாளர் செல்வகுமார் நேற்று மனுத்தாக்கல் செய்தார். கடைசிப்படம்: வந்தவாசி தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த திமுக வேட்பாளர் அம்பேத்குமார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களில் நேற்று 37 வேட்பாளர்கள் தரப்பில் 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தி.மலை மாவட்டத்தில் உள்ள8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று மனுத்தாக்கல் செய்ய விடுமுறை என்பதால் நேற்று அதிகம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

செங்கம் தனி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சண்முகம், அதிமுக வேட்பாளர் நைனாகண்ணுவின் மாற்று வேட்பாளராக தாமரை செல்வி, திமுக வேட்பாளர் மு.பெ.கிரியின் மாற்று வேட்பாளராக பாரதி தரப்பில் இரண்டு மனுக்கள், வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கோவிந்தன், பாரதிய டாக்டர் அம்பேத்கர் ஜனதா கட்சி சார்பில் கணேசன் என மொத்தம் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம் இரண்டு மனுக்களையும் மாற்று வேட்பாளராக இவரது மகன் சிவக்குமார் தரப்பில் இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. மக்கள் நீதி மய்யம் சார்பில் இரா.அருள் தரப்பில் 2 மனுக்களும் சுயேட்சை வேட்பாளராக ஜமில்பாஷா என மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த் திக்கு மாற்று வேட்பாளராக ஜெயபால், சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம், நாம் தமிழர் கட்சி சார்பில் லாவண்யா, திவ்யா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்து ஆதிதிராவிடர் கட்சி சார்பில் கலைமணி என மொத்தம் 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பீமன், சுயேட்சை வேட்பாளராக நிர்மலா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மயில்வாகனன், சுயேட்சை வேட்பாளராக ராஜேஸ்வரி, வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் குட்டிமணி ஆகிய 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் பாமக வேட்பாளர் செல்வகுமார், மாற்று வேட்பாளராக சத்யா, இந்திய குடியரசு கட்சி அத்வாலே பிரிவு சார்பில் வெங்கடேசன், சுயேட்சையாக சக்திவேல் மற்றும் லூர்தம்மாள் என மொத்தம் 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஆரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு மாற்றுவேட்பாளராக தாட்சாயிணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக அன்பு, சுயேட்சை வேட்பாளர்களாக கா.அன்பழகன், ம.அன்பழகன், கொ.அன்பழகன் என மொத்தம் 5 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வந்தவாசி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் அம்பேத்குமார், பெட்ரோல், டீசல் விலை உயர்வால்அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதை நினைவுபடுத்தும் வகையில், மிதிவண்டியில் வந்து மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக ஜெயந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரபாவதியும் கணேஷ் ஆகியோர் என மொத்தம் 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

கலசப்பாக்கம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நேரு, வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் கல்யாணசுந்தரம், சுயேட்சை வேட்பாளர்களாக ராஜாமணி, அமுதா ஆகியோர் என மொத்தம் 4 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று 37 வேட்பாளர்கள் சார்பில் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x