Published : 18 Mar 2021 03:15 AM
Last Updated : 18 Mar 2021 03:15 AM

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுகவை வளைக்கும் அதிமுக: முதலியார் வாக்குகள் சிதறாமல் இருக்க நடவடிக்கை

வேலூர்

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்பு பால் வி.எம்.பாலாஜி மாற்றப்பட்டு முன்னாள் துணை மேயராக இருந்த வி.டி.தர்மலிங்கம் புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.ஆர்.கே.அப்பு, திமுகவில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர். வேலூர் தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவிப்பவது அதிமுக, திமுக மட்டுமில்லாமல் பிற முன்னணி கட்சிகளிலும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதன்படி, நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் கள் என்பதால் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக சாார்பில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த வேலூர் மாநகர மாவட்டப் பொருளாளர் அப்பு பால் வி.எம்.பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்புமனுத்தாக்கல் நாளைமுடிய உள்ள நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமமுக வேட்பாளராக அப்பு பால்வி.எம்.பாலாஜி நீக்கப்பட்டு வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் வி.டி.தர்மலிங்கம் புதிய வேட்பாளராக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அமமுக முன்னணி நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூரில் முதலியார் சமூகத்தினர் அதிகம் என்பதால் எங்கள் தரப்பிலும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அப்பு பால் வி.எம்.பாலாஜியை தேர்வு செய்து அறிவித்தோம். இதனால், வேலூர் தொகுதியில் முதலியார் சமூக வாக்குகள் சிதறுவதையும் அதிமுகவின் வாக்குகளை அமமுக பிரிக்கக்கூடாது என்ற கணக்கும் எழுந்துள்ளது.

இந்த பிரச்சினையை சமாளிக்க பிரபல கல்வித்தந்தை ஒருவர் மூலம் அப்பு பால் பாலாஜியை சமாதானம் செய்து போட்டியில் இருந்து விலக ஏற்பாடும் செய்துவிட்டனர். இதன் ஒரு பகுதியே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது. மேலும், அந்த கல்வித்தந்தையின் கட்சியில் வேலூரில் போட்டியிட அவர் சில நாட்களுக்கு முன்பு முயன்ற தகவலும் எங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.

இதற்கிடையில், அப்பு பால் பாலாஜிக்கு பதிலாக அமமுக சார்பில் இஸ்லாமியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துமாறு நெருக்கடியும் கொடுத்தனர். ஆனால், அதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே சசிகலா பெங்களூருவில் இருந்து வேலூர் வழியாக வந்தபோது கிரீன் சர்க்கிள் பகுதியில் வரவேற்பு அளிப்பதில் பிரச்சினை இருந்தது. இதில் எங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் இடத்தை மாற்றினர்.

எனவே, எங்களுக்கு கொடுத்த நெருக்கடியை நாங்கள் ஏற்கவில்லை. அவர்களின் முயற்சி குறித்து டி.டி.வி.தினகரனிடம் தெளிவாக எடுத்துக்கூறிவிட்டோம். அவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரையே வேட்பாளராக நிறுத்தவும் கூறிவிட்டார். அதநேரம், வேலூரில் அமமுக சார்பில் ஏற்கெனவே போட்டியிட விருப்ப மனு அளித்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பின்வாங்கினர். அவர்கள் கல்வித்தந்தை மூலமாக அமமுகவை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், கூட்டணி கட்சி பலத்தை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரே வேட்பாளராக வேண்டும் என்பதால் முன்னாள் துணை மேயர் தர்மலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

தற்போது, அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துணை மேயர் வி.டி.தர்மலிங்கம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வேலை செய்தார் என்ற புகார் காரணமாக துணை மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது அமமுகவினர் மத்தியில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.

முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரே வேட்பாளராக வேண்டும் என்பதால் முன்னாள் துணை மேயர் தர்மலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x