Published : 16 Mar 2021 04:04 PM
Last Updated : 16 Mar 2021 04:04 PM
திமுக ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று, திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பாளர் ஆர்.காந்திக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 16) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வேனில் இருந்தபடி அவர் பேசும்போது, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை நீங்கள் எல்லாம் சேர்ந்து ஓட ஓட அடித்து விரட்டினீர்கள். அந்த கோபம் மோடிக்கு தமிழகம் மீது இருக்கிறது. அதனால்தான் ஜிஎஸ்டி வரியில் மட்டும் தமிழ்நாட்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. அது நமது பணம். கேட்டால் நிதி பற்றாக்குறை என்று சொல்கிறார்கள்.
ஆனால், கரோனா காலத்தில் மோடி மட்டும் ரூ.8,000 கோடி செலவில் 2 சொகுசு விமானங்களை வாங்கி இருக்கிறார். ஏற்கெனவே ஒரு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது ரூ.10 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார்கள். இதெல்லாம் யார் பணம்? எல்லாம் தமிழ்நாடு மக்களின், உங்களின் வரிப்பணம். நீங்கள் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை அறவே ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இப்போது, நீட் தேர்வை எதிர்ப்போம் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால், மருத்துவம் மட்டும் இல்லை. நாம் அதிகம் படிக்கும் செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு வைக்கிறார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை நாம் மறக்கக்கூடாது. புதிய கல்வி கொள்கை வந்தால் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட பொதுத்தேர்வு எழுத வைப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழ்நாட்டை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். கொஞ்சம் ஏமாந்தால் விற்றுவிடுவார்கள். அதற்கு ஒரே வழி இன்னும் 20 நாள்தான் இருக்கிறது. மறக்காமல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவினர் உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை கேளுங்கள். ஜெயலலிதா எப்படி இறந்தார் என கேளுங்கள். இந்தியாவிலே மிகப்பெரிய மருத்துவமனையில் பாதுகாப்புக்காக நிறைய கேமராக்கள் இருந்தன. ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்ட பிறகு ஒரு கேமரா கூட வேலை செய்யவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் வேண்டும் என்று கேட்டவர் பன்னீர்செல்வம். அவர் கேட்டபடி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்த பிறகும் பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளி வந்துள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 விலை குறைப்புடன் பால் விலையும் 3 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும். தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் வர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT