Published : 16 Mar 2021 01:27 PM
Last Updated : 16 Mar 2021 01:27 PM
கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமானம், ரயில், பேருந்து போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. கரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், ரயில் சேவை முழுமையாக இயக்கப்படாததால், அனைத்து ரயில்கள், புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிடக்கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், தற்போது 65 சதவீதம் ரயில் போக்குவரத்து நடைபெற்றுவரும் நிலையில், அனைத்து ரயில்களும் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பை ரயில்வே வெளியிடவில்லை என்றும், படிப்படியாக மட்டுமே ரயில் போக்குவரத்து மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
விமானப் போக்குவரத்து 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையிலும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், குளிர்சாதன வசதியுடைய பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் 100 சதவீதம் இயக்கப்பட உள்ள நிலையிலும், ரயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
பேருந்துகளை ஒப்பிடும்போது ரயில்களின் கட்டணங்கள் 300 சதவீதம் குறைவு எனவும், வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் அதிக கட்டணம் செலுத்தி பிற போக்குவரத்து வசதிகளை அணுக வேண்டியுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
தனிமனித விலகல், முகக்கவசம் அணிவது போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரயில்களை முழுமையாக இயக்க கோரி தான் அனுப்பிய கோரிக்கை மனுவை ரயில்வே துறை பரிசீலிக்கவில்லை என்றும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை இன்று (மார்ச் 16) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, கடந்த வாரத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தனிமனித விலகல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றினாலும், புறநகர் ரயில்களில் அவற்றை பின்பற்ற செய்ய முடியாது எனவும், கூட்டம் கூடுவதை தவிர்க்க முடியாது எனவும் கூறி, ரயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
நிபுணர்களை கலந்தாலோசித்து ரயில்வே நிர்வாகம் இதுசம்பந்தமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும், தடுப்பூசி போடும் பணிகள் முழுமையடைந்த பிறகோ அல்லது தொற்று பரவல் குறைந்தாலோ மனுதாரர் இதே கோரிக்கையை எழுப்பலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றங்களை திறக்கும் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT