Published : 13 Mar 2021 05:21 PM
Last Updated : 13 Mar 2021 05:21 PM

வேட்பாளர் தேர்வு; என் ரத்தம் கொதிக்கிறது - உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காங்கிரஸ் மீது ஜோதிமணி பகிரங்க குற்றச்சாட்டு

ஜோதிமணி: கோப்புப்படம்

சென்னை

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும், திமுக காங்கிரஸ் கட்சியை நடத்தும் விதம் வருத்தத்தை அளிப்பதாகவும் கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேதனையடைந்ததாக தகவல் வெளியானது.

25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டி என்ற பட்டியல் நேற்று முன்தினம் (மார்ச் 11) இரவு வெளியானது. இதில், சில தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியும், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை எதிர்த்தும், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகாத நிலையில், அதில், பல தவறுகள் நடப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, நிலக்கோட்டை தொகுதியில், தன் பாட்டி பொன்னம்மாள், 7 முறை எம்எல்ஏவாக இருந்தபோதிலும் தனக்கு வாய்ப்பளிக்கப்படாதது புறக்கணிக்கும் விதமாக இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் பணி செய்ய தன்னிடம் பணம் இருக்கிறதா என கே.எஸ்.அழகிரி கேட்டதாகத் தெரிவித்த ஜான்சிராணி, பண பலம் மட்டும்தான் காங்கிரஸ் வேட்பாளருக்கான தகுதியா என தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நிலக்கோட்டை தொகுதி, திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாக குற்றம் சாட்டி, அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஜோதிமணியும் காங்கிரஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜோதிமணி இன்று (மார்ச் 13) தன் ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவி மடுக்கவில்லை.

நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

எனது தலைவர் ராகுல் காந்தி பணம்தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி. கிடையாது. இந்தத் தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x