Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சம்பள்ளி மாணவ, மாணவிகள் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி தங்களது பெற்றோருக்கு அஞ்சல்அட்டைகளை அனுப்பும் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஏற்பாட்டின் பேரில் தபால் துறையிடம் இருந்து 1 லட்சம்அஞ்சல் அட்டைகள் வாங்கப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. தற்போது வகுப்புகள் நடைபெறும் 9, 10, 11, 12-ம் வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளிடம் இந்த அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டன.
‘தேர்தலில் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். வாக்குரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது. ஓட்டுக்கு பணம்வாங்கக் கூடாது. நேர்மையாக வாக்களிக்க வேண்டும், என்பனபோன்ற விழிப்புணர்வு வாசகங்களை அஞ்சல் அட்டைகளில் மாணவ, மாணவிகள் தங்கள் கைப்பட எழுதினர்.
பின்னர் தங்களது தாய், தந்தை, தாத்தா, பாட்டி உள்ளிட்டோரின் முகவரிகளை அஞ்சல் அட்டைகளில் எழுதி திரும்ப ஒப் படைத்தனர்.
இவ்வாறு பெறப்பட்ட 1 லட்சம்விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகளை மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு தபால் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 1 லட்சம் அஞ்சல் அட்டைகளையும் அஞ்சல் துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.ஞானகவுரி, துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், தூத்துக்குடி அஞ்சல் கேட்ட உதவி கண்காணிப்பாளர் முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘1 லட்சம் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் அடுத்த ஓரிரு தினங்களில் சென்றடையும். தங்கள் குழந்தைகளே கடிதம் எழுதியுள்ளதால் அதனை பெற்றோர் நிச்சயம் கவனத்தில் கொள்வார்கள். தமிழகத்திலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு நடவடிக்கை நிச்சயம் நல்ல பலனைத் தரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT