Published : 11 Mar 2021 03:13 AM
Last Updated : 11 Mar 2021 03:13 AM

'விஜயகாந்தை அரியாசனத்தில் ஏற்றாமல் ஓய மாட்டேன்!'- சிதம்பரத்தில் விஜய பிரபாகரன் சூளுரை

சிதம்பரத்தில் கட்சிப் பிரமுகரின் இல்ல நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.

கடலூர்

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் உமாநாத் இல்ல நிகழ்ச்சியில் நேற்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சி தொடர்ந்து இருப்பதற்கு தேமுதிக தான் காரணம். கடந்த தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரு சதவீதம்தான் வித்தியாசம்.

2006-ம் ஆண்டு தேர்தலில், ‘மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி’ என்று விஜயகாந்த் அறிவித்தார். அதுபோல தற்போது நிகழ ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. விஜயகாந்த் மகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன். அவரை அரியாசனத்தில் ஏற்றாமல் ஓய மாட்டேன்.

எனது தந்தை எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறார்; உங்களுக்காக தான் நான் இந்த தேர்தல் அரசியலில் இறங்கி இருக்கிறேன். 40 ஆண்டுகளாக விஜயகாந்த் மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். நாங்கள், பிழைக்க அரசியலுக்கு வரவில்லை; உழைக்க வந்திருக்கிறோம். தமிழகத்திற்கு நல்லது செய்து விட்டுத்தான் ஓய்வோம்.

பாமக, பாஜகவை விட ஏன் எங்களை குறைத்து எடை போடுகிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், ‘விஜயகாந்த் வந்தால் தான் ஜெயிக்க முடியும்!’ என்று கூப்பிட்டார்கள். நாங்கள் வந்து உழைத்தோம்.

நாங்கள் கொடுத்து சிவந்த கரம்; வாங்கிப் பழக்கமில்லை, யாரிடமும் பேரம் பேசிப் பழக்கமில்லை. பொறுமை காத்தோம், கூட்டணி தர்மம் காத்தோம் ஆனாலும் அவர்கள் மதிக்கவில்லை. இதற்கு மேலும் பொறுக்க முடியாதுஎன்று வெளியேறினோம். அதிமுகவை விழ்த்துவதுதான் எங்களது ஒரே குறிக்கோள். 1,000, 1,500 என இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி விடுகின்றனர். விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், அவர் மீண்டும் மக்கள் முன் வந்து நிற்பார். இந்த நடராஜர் மண்ணிலிருந்து சொல்கிறேன்; இனி எந்தக் காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை. இனிதான் கேப்டனின் ஆட்டம் ஆரம்பம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x