Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதை வரவேற்று, சேத்துப் பட்டில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினர்.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்தார். இதனை வரவேற்று, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
அப்போது தேமுதிகவினர் கூறும்போது, “அதிமுக கூட்டணியில் தேமுதிகவை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தனர். கூட்டணி கட்சிகளை அதிமுக தலைமை சமமாக கருத வேண்டும். ஆனால் அவர்கள், ஒரு கட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும், தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் குறைவு எனக் கூறி, தொகுதிகளை ஒதுக்கீடு செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது என பேரம் பேசினர். தேமுதிக தலைமையும், கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்று வந்தது. ஆனால், அதிமுக தலைமை எங்களை உதாசீனப்படுத்தியது. சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கி, அவமானப்படுத்த திட்ட மிட்டது.
இதனால், அதிமுக கூட்டணி யில் இருந்து வெளியேற வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். தொண்டர்களின் கருத்தை தலைமைக்கும் தெரிவித்து வந்தோம். எங்களது கருத்தை ஏற்று, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். தொண்டர் களுக்கு மதிப்பு அளிக்கும் ஒரு இயக்கம் தேமுதிகதான்.
தொண்டர்களின் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவு மகத்தானது. தேமுதிகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணியாற்றுவோம். இனி, அதிமுகவுக்கு வீழ்ச்சிதான். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும். எங்களது வாக்குவங்கி என்ன என்பதை அவர்களுக்கு புரிய வைப்போம்” என்றனர்.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில், சேத்துப்பட்டு ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்துகொண்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT