Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM
வேலூருக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை வருகைத்தர உள்ள நிலையில்வடக்கு மண்டல ஐஜி சங்கர் தலைமையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் 16-வது பட்டமளிப்பு விழா, நாராயணி பீடத்தில் மகாலட்சுமி யாகம் நாளை நடைபெற உள்ளது. இந்த 2 நிகழ்ச்சிகளிலும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, வேலூர் மாவட்டம்சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 16-வது பட்டமளிப்பு விழா நாளை (10-ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் இந்திய குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த், மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்ற உள்ளார். அதேபோல், வேலூர் அடுத்த அரியூரில் உள்ள நாராயணி பீடத்தில் இன்று (9-ம் தேதி) தொடங்கி நாளை (10-ம் தேதி) வரை மகாலட்சுமி யாகம் நடை பெறுகிறது. தமிழகத்தில் 108 பெருமாள் கோயில் பட்டாட்சியர்கள் மகாலட்சுமி மந்திரத்தை ஒரு லட்சம் முறை படித்து யாகம் நடத்தவுள்ளனர். இந்த யாகத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
இந்த 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பிற்பகல் ஹெலிகாப்டரில் புறப்படும் அவர் நாராயணி பீடம் அருகேயுள்ள பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஹெலிபேடுக்கு சென்றடைகிறார். நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வேலூரில் வடக்கு மண்டல ஐஜி சங்கர் தலைமையில் வேலூர் சரக டிஐஜி காமினி மேற்பார்வையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திரு வள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். குடியரசுத் தலைவர் வருகைக் காக நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் செய்துள்ளனர். மேலும், கரோனா பரவல் அச்சத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT