Published : 07 Mar 2021 03:28 PM
Last Updated : 07 Mar 2021 03:28 PM
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஏப்ரல் 6-ம் தேதிக்குப் பின் தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஏற்கெனவே தமிழகத்துக்குக் கடந்த வாரம் பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா காரைக்கால், விழுப்புரம் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். அதன்பின் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சென்னையில சந்தித்து அமித் ஷா கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சூழலில் கூட்டணி உறுதியாகி, தொகுதிப் பங்கீடு முடிவானபின் முதல் கட்டமாகப் பிரச்சாரத்துக்காகத் தமிழகத்துக்கு அமித் ஷா இன்று வந்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இன்று அமித் ஷா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
இதற்காகப் பிரச்சாரம் செய்ய திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் விமானம் மூலம் அமித் ஷா இன்று காலை நாகர்கோவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
அதன்பின், நாகர்கோவிலில் வெற்றிக் கொடி ஏந்தி எனும் பெயரில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா வாக்கு சேகரித்தார்.
அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:
''தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக வெல்லும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன். வீடு வீடாகச் சென்று தாமரை சின்னத்தை மக்களிடம் சேர்க்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளேன்.
மக்களிடம் பிரதமர் மோடியின் செய்திகளைக் கூறுவோம். இந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டோம். இந்தத் தேர்தலில் நிச்சயம் ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.
மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் முடிவுகள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என நம்புகிறேன்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT