Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவு பொருட்களில் இருந்து பல்வேறு கலைநயம் மிக்க பொருட்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு குளியலறையை உருவாக்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது பழைய இரும்பு டிரம்களைக் கொண்டு கலைநயம் மிக்க ஷோபாவை உருவாக்கி அசத்தியுள்ளனர் மாநகராட்சி பணியாளர்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிசார்பில் கொசு ஒழிப்புக்காக தண்ணீரில் எண்ணெய் (MosquitoLarvicidal Oil) தெளிக்கப்பட்டது. இந்த எண்ணெய் வாங்கியசுமார் 70இரும்பு டிரம்கள் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகேயுள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் குப்பைபோல தேங்கிக்கிடக்கிறது. இவற்றை கலைநயமிக்க ஷோபாக்களாக மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆணையர் பாராட்டு
தற்போது முதல் கட்டமாக ஒரு ஷோபா செட் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. மூன்று டிரம்களை வெட்டி மூன்று ஷோபாக்கள் மற்றும் ஒரு டீப்பாய் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஷோபா செட் மாநகராட்சி மைய அலுவலகத்தின் வரவேற்பறையில் வைக்கப்பட்டுள்ளது. ஷோபா செட்டை பார்த்த ஆணையர் சரண்யா அறி, மாநகராட்சி பணியாளர்களை வெகுவாக பாராட்டினார்.
ரூ.2 ஆயிரம் செலவு
மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “இந்த டிரம்களை ஷோபாக்களாக மாற்றி மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் பூங்காக்களில் வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு ஷோபா செட் செய்வதற்கு ரூ.2,000 வரை செலவாகிறது. கடையில் புதிய ஷோபா செட் வாங்கினால் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். இதில் பெயின்ட் மற்றும் மெத்தை மட்டுமே வெளியில் வாங்க வேண்டியுள்ளது. மற்றபடி பழைய டிரம், பழைய இரும்பு கம்பிகளைக்கொண்டே இந்த ஷோபா உருவாக்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT