Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கூட்டங்களை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நடத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி நிறைவு பெறுகிறது. வரும் 20-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வரும் 22-ம் தேதி மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவும், மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 லட்சத்து 626 ஆண்களும், 5 லட்சத்து 27 ஆயிரத்து 127 பெண்களும், 51 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 804 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 1,122 முதன்மை வாக்குச்சாவடிகள், 325 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,447 வாக்குச்சாவடிகள் உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் பயன் படுத்துவதற்காக 2,025 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,904 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள், 2,521 விவிபாட் கருவிகள் உள்ளிட்டவற்றை ஆற்காடு ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறுவதை கண்காணிக்க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் மூன்று குழுக்கள் வீதம் மாவட்டத்தில் 12 பறக்கும் படை, 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தேர்தல் தொடர் பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 18004255669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், ‘சி-விஜில்’என்ற செல்போன் செயலி வழியாக வும் புகார்களை தெரிவிக்கலாம். இதில், அளிக்கப்படும் புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்தல் நடத்தை விதிகளை அரசியல் கட்சியினர், அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்கள் வாக்குக் காக பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் ஏதும் பெறாமல் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும்’’ என்றார்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், அரக்கோணம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவதாஸ், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT