Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல்செய்யப்பட்டது. இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டு இரண்டாவது முறையாக நடத்தப் பட்டது.
தமிழகத்தில் தற்போது சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும்நிலையில், சென்னை ஆர்.கே.நகரில்நடந்த இடைத்தேர்தல் மற்றும்வேலூர் நாடாளுன்ற தேர்தலில் இருந்த பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
எனவே, வரும் சட்டப் பேரவை தேர்தலில் பணப் பரிமாற்றத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, வங்கிகளில் பணப் பரிமாற்ற விவரங்களை கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘இந்தியரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மாறான பணப்பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து வங்கி மேலாளர்கள், பண காப்பகங்களான செஸ்ட் கிளைகளின் மேலாளர்கள் நெறிமுறை களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26-ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து வங்கி பண காப்பகங் களும் பணம் எடுப்பு மற்றும் பணம் விடுவிப்பு, பண பரிவர்த்தனை விவரங்களை தினசரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து வங்கிக் கிளைகளும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணம் எடுப்பு, வைப்பு உள்ளிட்ட விவரங்கள், சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை விவரங்களை அளிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு களின் நடவடிக்கை விவரங்களையும் தினசரி மாவட்ட தேர்தல் அலுவல ருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆர்.டி.ஜி.எஸ் முறையில் சந்தேகத்துக்குரிய முறையில் பண பரிவர்த் தனை இருந்தால், அது தொடர்பாகவும் புகார் அளிக்க வேண்டும். கிராமப்புற வங்கிக் கிளைகளில் நீண்ட காலமாக பண பரிவர்த்தனை ஏதும் இல்லாமல் இருந்து தற்போது பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக சந்தேகம் இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வங்கி முகவர்கள் உரிய சான்றுகளுடன் செல்ல வேண்டும். அதில், பணத்தாள் களின் முழு விவரத்தையும் குறிப்பிட்டு வங்கி அலுவலரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு பண பரிவர்த்தனை செய்யும்போது அந்த வங்கி அலுவலரின் அங்கீகரிப்பு சான்று இருக்க வேண்டும்’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT