Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக தமிழகம், புதுச்சேரியில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித் திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் காலை ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயில் அடித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பெய்ய தொடங்கிய கனமழை நேற்று அதிகாலை 10 மணியை தாண்டியும் கொட்டியது. இதனால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஓடியது.
குறிப்பாக இந்திராகாந்தி சதுக்கம், ராஜீவ்காந்தி சதுக்கம், ஈசிஆர் சாலை சிவாஜி சிலை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் தண்ணீரில் மிதந்து ஊர்ந்தபடி சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கனமழையால் ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், சாரம், காமராஜர் நகர் போன்ற இடங்களில் மழைநீர் சூழ்ந்து தனித்தீவு போன்று காணப்பட்டது. பாவாணர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் நடந்து செல்லவும் முடியாமல் தவித்தனர்.
அதுபோல் பூமியான்பேட்டை, லாஸ் பேட்டை, பாக்கமுடையான்பட்டு உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவையும் மூழ்கின.
பெரிய வாய்க்கால், உப்பாறு கால்வாய், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட் டவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காமராஜர் சாலை, வள்ளலார் சாலை போன்ற சாலைகளில் கயிறு கட்டி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பல இடங்களில் தேங்கிய மழைநீரை பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடபட்டுள்ளனர்.
அதேபோல் கிராமப்புறங்களில் பாகூர், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்கள், வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பாகூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகளும் வெள்ளத்தில் மூழ்கின.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. எவரும் எதிர்பாராத நிலையில் விடிய விடிய பெய்த இந்த கனமழையால் மக்கள்வீடுகளுக்குள் முடங்கினர். சண்டே மார்க் கெட் வியாபாரமும் பாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று அதிகாலை 1 மணி முதல் காலை 8.30 மணி வரை 210 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
பள்ளிகள் விடுமுறை
இதனிடையே கனமழை காரணமாக புதுச்சேரி பிராந்தியத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி களில் உள்ள 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று (பிப். 22) விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி அரசு கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT