Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM
``மதுரை- நாகர்கோவில் இடையே நடைபெறும் இரட்டை ரயில் பாதை திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும்” என்று, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று கேரள மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக திருநெல் வேலி வரை ஆய்வு செய்தார். ரயில் நிலையங்கள், ரயில்வே பாலங்கள், லெவல் கிராசிங்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இரட்டை ரயில் பாதை
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையிலிருந்து நாகர் கோவில் வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டப்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்படு கிறது. இப்பணிகள் 2022-ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும். கரோனாவால் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. எனவே, பயணிகள் ரயில்களை இயக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு, ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
அப்போது, மதுரை கோட்ட மேலாளர் லெனின் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.
பயணிகள் சங்கம் மனு
செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் முரளி, கிருஷ்ணன், ராமன் ஆகியோர், ரயில்வே மேலாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாலக்காடு- திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செங்கோட்டையில் நிறுத்தம் வேண்டும். குருவாயூர்- புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும்.
பயணிகள் நலன் கருதி சென்னை- கொல்லம் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து மாலை 6.30 மணிக்கும், கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கும் புறப்படும் வகையில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
எர்ணாகுளம், வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, கொல்லத்துக்கு மீண்டும் பயணிகள் ரயில் சேவையை தொடங்க வேண்டும். வாரத்தில் சில நாட்கள் திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்படும் பிலாஸ்பூர், தாதர் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி, திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக கோவை, பெங்களூருவுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும்.
செங்கோட்டை- சென்னை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டை- சென்னை பொதிகை எஸ்பிரஸ் ரயில் மாம்பலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனுவில் கூறப்பட்டிருந்தது.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம், தென்காசி வழியாக கோவை, பெங்களூருவுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT