Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு 20 சதவீத மின்சார ரயில்களின் சேவையை அதிகரித்து இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 660 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுமக்கள் பயணம் செய்வதற்கான நேரக்கட்டுப்பாடு நீடித்து வருகிறது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் இயக்குவது போல் கும்மிடிப்பூண்டி தடத்தில் போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில்லை என பயணிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பயணிகள் கூறியதாவது:
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சீரான மின்சார ரயில் வசதி இல்லை. இதனால், தினமும் வேலைக்கு செல்வோர், விரைவு ரயில்களை பிடிக்க சென்னை சென்ட்ரல் வருவோர் அவதிப்படுகின்றனர்.
எனவே, இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய மற்ற தடத்தில் இயக்குவது போல் மின்சார ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் புதிய பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றதால், மற்ற தடங்களை ஒப்பிடும்போது, இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவை குறைவாக இருந்தது. தற்போது, சென்னை - அத்திப்பட்டு வரையில் புதிய பாதை அமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இந்த தடத்தில் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 20 சதவீதம் மின்சார ரயில்களின் சேவையை அதிகரித்து இயக்க ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல், மின்சார ரயில்களை தாமதமின்றி இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றனர்.
சென்னை - கும்மிடிப்பூண்டி தடத்தில் புதிய பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றதால், மற்ற தடங்களை ஒப்பிடும்போது, இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவை குறைவாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT