Published : 09 Feb 2021 03:14 AM
Last Updated : 09 Feb 2021 03:14 AM
அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் குற்றாலம் மீண்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், 8 மாதங்களாக குற்றாலம் வெறிச்சோடிகாணப்பட்டது. குற்றாலத்தில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்யும் வாகன ஓட்டுநர்கள்,விடுதி உரிமையாளர்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 15-ம் தேதிமுதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால், குற்றாலத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்தது.வடகிழக்குபருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாகஅருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் அருவிகளில் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்தது. பிரதான அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் குறைந்து வருகிறது. குற்றாலம் மீண்டும் களையிழந்து காணப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT