Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM

சசிகலாவை வரவேற்க 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் வேலூரில் திரளும் தென்மாவட்ட அமமுகவினர்: ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் குவிந்தனர்

வேலூர்

வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா வருகையால் தென் மாவட்ட அமமுக நிர்வாகிகள் வேலூரில் திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் குவிந்து வரு கின்றனர். வேலூர் மாவட்டம் வழி யாக அவர் கடந்து செல்வதில், பிரச்சினைகள் ஏதும் ஏற்படக் கூடாது என்பதில் அதிமுக, அமமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பெங்களூருவில் ஓய்வு எடுத்து வரும் சசிகலா, வேலூர் மாவட்டம் வழியாக நாளை (பிப்.8) சென்னை திரும்பவுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க அமமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு மையங்களிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளதால், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சசிகலா வின் வாகனத்தை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி புரம் என ஒவ்வொரு மாவட்ட எல்லை தொடக்கம் மற்றும் முடியும் இடங்களிலும் செண்டை மேளம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், இசை நிகழ்ச்சிகள் என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கூட்டத்தை கூட்டவுள்ளனர். ஒவ்வொரு வரவேற்பு மையத்திலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் என குறைந்த பட்சம் 2 ஆயிரம் பேருக்கும் குறையாமல் திரண்டிருக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்காக, முன்கூட்டியே ஹோட்டல் அறைகள், திருமணமண்டபங்களை வெளிமாவட்ட அமமுகவினர் ஆக்கிரமித்துள் ளனர். வேலூரில் மட்டும் பல்வேறு ஹோட்டல்களில் 200 அறைகள், 5 திருமண மண்டபங்களில் தென்மாவட்ட அமமுக நிர்வாகிகள் முன்பதிவு செய்து குவிந்துள்ளனர்.

வரவேற்பு மையங்கள்

நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி சுங்கச்சாவடி, ஆம்பூர், மாதனூர், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, வேலூர் கிரீன்சர்க்கிள், பூட்டுத் தாக்கு, எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி, வாலாஜா சுங்கச்சாவடி, காவேரிப் பாக்கம், ஓச்சேரி, பெரும்புலி பாக்கம் என 12 இடங்களில் சசிகலாவுக்கு கலை நிகழ்ச்சி களுடன் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ரத்தாகும் ஹெலிகாப்டர் வரவேற்பு

சசிகலாவை வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டரில் பூக்கள் தூவ அனுமதிக்கக் கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் எம்எல்ஏ ஜெயந்திபத்மநான் கோரிக்கை மனு அளித்தார். அதன் மீது காவல் துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். அதே நேரம், தனது கோரிக்கைக்கு அனுமதி இல்லை என்பதை மாவட்ட நிர்வாகம் சூசகமாக தெரிவித்துள்ளதாக ஜெயந்தி பத்மநாபன் கூறியுள்ளார். மேலும், ‘ஹெலிகாப்டரில் பூக்கள் தூவ எங்களிடம் அனுமதி கோர வேண்டியதில்லை என்றும், சிவில் விமான போக்குவரத்து ஆணையம்தான் முடிவு செய்யும்’ என காவல் துறையினர் கை விரித்துள்ளனர்.

வேலூரில் பேனர் சர்ச்சை

தமிழக முதல்வர் பழனிசாமி வேலூர் மாவட்டத்தில் பிப்.9-ல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அவரை, வரவேற்க கிரீன் சர்க்கிள் பகுதியில் பெரிய பேனர்களை அதிமுகவினர் வைத்துள்ளனர். ஆனால், பிப்.8-ல் சசிகலா வருகைக் கான வரவேற்பு மையமாக கிரீன் சர்க்கிள் இருப்பதால், அங்கு அதிமுகவினர் வைத்துள்ள பேனரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கிரீன் சர்க்கிள் பகுதியில் தென் மாவட்ட அமமுகவினர் திரளுவார் கள் என்பதால் அவர்களால் பேனருக்கு சேதம் ஏற்பட்டால், அது வேறு விதமான பிரச்சினையாக மாறும் என்பதால், பேனரை அகற்றுவது அல்லது சசிகலா வரவேற்பை கிரீன் சர்க்கிள் பகுதிக்கு பதிலாக வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்வது குறித்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதில், இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. வேலூர் மாவட்டம் வழியாக சசிகலா கடந்து செல்வதால் எந்த பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிமுக, அமமுகவினர் மத்தியில் பொதுவான கருத்தாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x