Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

ஜனவரியில் பெய்த கனமழை பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை

சென்னை

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு களை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர்.

தமிழகத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம், எதிர்பாராத வகையில் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்தது. இதனால் விவ சாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழக வேளாண் துறை, வருவாய்த் துறையினர் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். அதன்படி, 6 லட்சத்து 81,334.23 எக்டேர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் பழனிசாமி, 11 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.1,116 கோடியே 97 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், மத்திய குழுவினர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரவுள்ளதாகவும் தெரி வித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில், மத்திய எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குநர் மனோகரன், நிதித் துறை செலவின துணை இயக்குநர் மகேஷ்குமார் ஆகியோரைக் கொண்ட குழு நாளை மதுரை வருகிறது. அந்தக் குழு விருதுநகர், தூத்துக்குடியில் பாதிப்புகளை பார்வையிட்டு, இரவு ராமேசுவரம் வருகிறது. அதன்பின் 5-ம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாதிப்புகளை கணக்கிட்ட பின் சென்னை வருகிறது.

அதேபோல், மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்சாரக் குழுமத்தின் உதவி இயக்குநர் சுபம் கார்க், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல அலுவலர் ரணன்ஜெய் சிங் ஆகியோர் கொண்ட குழு, நாளை திருச்சி வழியாக புதுக்கோட்டை வருகிறது.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளைப் பார்வையிடுகிறது. மறுநாள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் பாதிப்புகளை பார்வையிட்டு சென்னை வருகிறது.

அதைத் தொடர்ந்து இரு குழுவினரும் பாதிப்புகள் குறித்து மாநில அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்திய பின், பிப்.6-ம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x