Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை முழக்கத்துடன் வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. (அடுத்த படம்) ஜோதி தரிசனத்தை காண வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.படங்கள்: எம்.சாம்ராஜ்

கடலூர்

வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் (ஜன.27) காலை, வள்ளலார் சத்திய ஞான சபை கட்டுவதற்கு இடம் அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் வரிசை தட்டுடன் வந்து, கொடியேற்றினர். இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று (ஜன.28) தைப்பூச திருவிழா நடைபெற்றது. காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 , மணி 10 மணி மற்றும் இன்று (ஜன.29) காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

150- வது ஜோதி தரிசனம்

‘அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங் கருணை’ என்ற முழக்கத்துடன் வள்ளலார் வழி நிற்கும் பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

’நம் மனதின் அகஇருள் நீக்கி, நாம் உயர்ந்த ஆன்ம நிலையை உணர வேண்டும்’ என்ற தாத்பரியத்தை உணர்த்தும் வகையில் இங்கு 7 திரைகள் விலக்கப்பட்டு, இந்த ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை கடந்த 1872-ம் ஆண்டு வள்ளலார் சத்திய ஞான சபையில் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கி இன்று காலை நடந்த இந்த நிகழ்வு 150- வது ஜோதி தரிசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அன்ன தானம் செய்தவர்கள் உணவு வகைகளை பொட்டலமிட்டு வழங்கினர். ராட்டினம் போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கும், தற்காலிக கடைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

ஜோதி தரிசனத்துக்கான சிறப்பு ரயில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடந்தாண்டை விட பக்தர்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது.

ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து, நாளை (ஜன.30) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நடைபெறும்.

இந்நிகழ்வுக்காக வடலூர் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறைக்கு கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x